தமிழகம்

தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன்

தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதம்

சென்னை,

புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன் என்றும், தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன் என்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பெருமிதத்துடன் கூறி உள்ளார்.

பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளராக திரௌபதி முர்மு அறிவிக்கப்பட்டார். தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியினரின் ஆதரவைப்பெற நேற்று திரௌபதி முர்மு சென்னை வந்தார்.

இதனைத் தொடர்ந்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் தேசிய ஜனநாயக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்களை சந்தித்து திரவுபதி முர்மு ஆதரவு கோரினார். இந்த கூட்டத்தில் கழகத்தின் சார்பில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி கலந்து கொண்டு கழகத்தின் ஆதரவை தெரிவித்தார்.

இந்த கூட்டத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசியதாவது:-

புனிதமிக்க தமிழகத்துக்கு வந்திருப்பதை நான் மகிழ்ச்சியாக கருதுகிறேன். செம்மொழி, செழுமை மிக்க கலாச்சாரம், பாரம்பரியத்தின் நிலமாக தமிழகம் விளங்குகிறது. மகத்துவமிக்க புலவர் திருவள்ளுவருக்கு எனது மரியாதையை செலுத்துகிறேன்.

இந்த சுதந்திர போராட்ட வீரர்கள் உள்பட இந்த மண்ணின் மைந்தர்கள் அனைவருக்கும் எனது வணக்கத்தை தெரிவித்துக் கொள்கிறேன். ராஜகோபாலாச்சாரி, காமராஜர், எம்.ஜி.ஆர்., புகழ்பெற்ற விஞ்ஞானி ஏ.பி.ஜே.அப்துல்கலாம், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, புகழ்பெற்ற சுந்தர் பிச்சை, தொழிலதிபர் சிவ் நாடார், இந்திராணி, செஸ் சாம்பியன் விஸ்வநாதன் ஆனந்த் உள்பட புகழ்பெற்றவர்களை தமிழகம் உருவாக்கியுள்ளது.

பாண்டியன், சேரன், சோழ மன்னவர்களின் ஆட்சிக்காலம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஆங்கிலேயர்களிடம் இருந்து நமது நாடு விடுதலை பெறுவதற்கு வேலூர் கலகம் உள்பட பல்வேறு சம்பவங்கள் தமிழகத்தின் பங்கு முக்கியமானது.

நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் படையில், தமிழகத்தில் இருந்து ஏராளமான வீரர்கள் இருந்தனர். தமிழகம் கலை, இலக்கியம், இசை, நடனம் உள்ளிட்ட துறையில் முத்திரை பதித்துள்ளது.

மாமல்லபுரம், கங்கைகொண்ட சோழபுரம் உள்பட பல இடங்கள் தமிழர்களின் கட்டிட கலைக்கு இன்றளவும் சான்றாக இருக்கின்றன. தமிழகம் சிறப்பான மாநிலம். ‘யாதும் ஊரே யாவரும் கேளீர்’ என்ற கனியன் பூங்குன்றனாரின் வரிகளை நான் இங்கு குறிப்பிடுகிறேன். தமிழகம் ஒளிமயமான கடந்த காலத்தை கொண்டுள்ளது.

தமிழகம் விவசாயத்தை சார்ந்து இருக்கிறது. தமிழக மக்களை நினைத்து நான் பூரிப்படைகிறேன். பழங்குடியின குக்கிராமத்தை சேர்ந்தவள். நான் பழங்குடியின வகுப்பை சேர்ந்தவள். சமூக நீதியை நிலைநிறுத்தும் வகையில் நான் குடியரசு தலைவர் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கிறேன்.

இவ்வாறு தேசிய ஜனநாயக கூட்டணியின் குடியரசுத்தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு பேசினார்.