தற்போதைய செய்திகள்

நீதிமன்றம் சென்று கழக தொண்டர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியவர் ஓபிஎஸ்

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் பேட்டி

சென்னை

பொதுக்குழு என்ன முடிவு எடுக்கின்றதே அதற்கு கட்டுப்படுவது தான் நல்ல தலைவருக்கு அழகு. நல்ல தொண்டனுக்கு அழகு. அதற்கு கட்டுப்படாமல் நீதிமன்றத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியினருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது என்றால் இதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான் என்று முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறி உள்ளார்.

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் ஓட்டலில் முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

குடியரசுத்தலைவர் தேர்தலில் போட்டியிடுவதற்கு ஒரு பழங்குடியினத்தை சேர்ந்தவரை பிரதமர் அறிவித்தார். இந்தியாவில் உயர்ந்த பதவி, உச்சபட்ச பதவியாக இருக்கின்ற குடியரசு தலைவர் பதவிக்கு பழங்குடியினத்தை சேர்ந்த ஒருவர் வருவது என்பது இந்தியாவில் ஜனநாயகம் முழுமையான அளவுக்கு உயர்ந்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த தேர்வு இருக்கின்றது.

ஒரு விஷயத்தை எடப்பாடியார் இங்கு தெளிவுபடுத்தியுள்ளார். அப்துல்கலாமை குடியரசு தலைவர் வேட்பாளராக களம் இறக்கியபோது அன்றைக்கு இதயதெய்வம் அம்மா அவர்கள் கழகத்தின் ஆதரவை அளித்தார். எனவே அந்த அடிப்படையில் இன்றைக்குத் திரௌபதி முர்முவுக்கு கழகத்தின் ஆதரவினை எடப்பாடியார் மேடையில் அறிவித்தார்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.

இதன்பின்னர் செய்தியாளர்களின் கேள்விகளும், அதற்கு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இந்த கூட்டத்தில் அ.தி.மு.க,வை சேர்ந்த அனைவரும் பங்கேற்ற நிலையில் ஓபிஎஸ் பங்கு பெறவில்லையே.

பதில்: கழகத்தைப் பொறுத்தவரை பொதுக்குழுதான் இறுதி அதிகாரம் படைத்தது. எப்படி ஐநா சபை உலகத்திற்கே முக்கியமாக இருக்கின்றதே அதுபோல எங்களுடைய கட்சிக்கு அதி முக்கியத்துவம் வாய்ந்த, அதிகாரம் படைத்த அமைப்பு என்று சொன்னால் பொதுக்குழுவைத்தான் சொல்ல முடியும்.

இந்த பொதுக்குழுவிலே அவர் கலந்து கொண்டு பொதுக்குழு எடுக்கும் முடிவுக்கு அவர் கட்டுப்பட்டிருக்க வேண்டும். கழகத்தின் சட்ட திட்டத்தின் படி பொதுக்குழு அதிகாரம் படைத்தது என்று சொல்லும்போது, அந்த பொதுக்குழுவிலே கலந்துகொண்டு கட்சியினரின், பொதுக்குழு உறுப்பினர்களின் ஒட்டுமொத்த எண்ணத்தை அவர்கள் முழுமையாக ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் செயலாற்றினால் எந்த பிரச்சினையும் நிச்சயமாக இருக்காது. அதற்கு அவர் தான் காரணம். நாங்கள் காரணம் கிடையாது. கட்டுப்பட்டிருந்தால் அவர் தனியாக பார்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது.

ஒட்டுமொத்த தொண்டர்களின் எண்ணமே ஒற்றை தலைமை என்பதை நோக்கித்தான் செல்கிறது. அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடியார் தலைமை தாங்க வேண்டும் என்பது கட்சியினரின் விருப்பம். தொண்டர்களின் விருப்பமும் கூட அப்படி இருக்கும்போது பொதுக்குழுவில் என்ன முடிவு எடுக்கிறீர்களே அதற்கு கட்டுப்பட்டு செல்ல வேண்டியது தானே.

இங்கு பலம் என்பது பொதுக்குழு தான். பொதுக்குழு என்பது தொண்டர்களின் துடிதுடிப்பை சொல்லும் இடம். பொதுக்குழுவில் யாரை விரும்புகிறார்களே அவர்களை ஏற்றுக்கொண்டால் அது நல்ல விஷயம். இதனை ஏற்றுக்கொள்ளாத நிலையில் கட்சி இதுபோன்ற நிலையை சந்திக்கிறது என்றால் இதற்கு முழு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான்.

கேள்வி: அ.தி.மு.க.வில் ஒருங்கிணைப்பாளர் கிடையாது. இணை ஒருங்கிணைப்பாளர் கிடையாது, இதுபோன்ற நிலையில் இடைத்தேர்தலை சந்திக்கக்கூடிய நிலையில் கட்சி சின்னம் தொடர்பாக படிவம் தரும் அதிகாரம் யாருக்கு உள்ளது. இதில் எழுந்த சர்ச்சை தொடர்பாக உங்கள் கருத்து.

பதில்: இந்த நிலைமை யாரால் உருவானது. ஓ.பன்னீர்செல்வம் தானே உருவாக்கினார். அவர் ஏன் நீதிமன்றம் செல்ல வேண்டும். நீதிமன்றம் செல்லாமல் பொதுக்குழு எடுத்த முடிவுக்கு கட்டுப்பட்டிருந்தால் கட்சியில் எந்த பிரச்சினையும் இருந்திருக்காது. அதனால் அந்த பொறுப்பே காலாவதி ஆகி விட்டது. விண்ணப்பப் படிவம் தருவதற்கு 27-ம்தேதி கடைசி நாள்.

அன்று எதுவும் சொல்லவில்லை. 30ம்தேதி படிவம் தரவேண்டும் என்றால் இது நடைமுறையில் சாத்தியம் உண்டா. ஒரு குழப்பத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காகத்தான் அவரின் செயல் இருக்கின்றதே தவிர வேறு எதுவும் கிடையாது.

கேள்வி: இதனால் தொண்டர்கள் மனதில் சோர்வை ஏற்படுத்தாதா.

பதில்: இதற்கு எல்லாம் காரணம் நீங்கள் தான். (ஓ.பன்னீர்செல்வம்) சோர்வு, மனஉளைச்சல் தொண்டர்களின் மனதில் ஏற்படுகிறது என்றால் அதற்கு முழு முதற்காரணம் ஓ.பன்னீர்செல்வம் தான்-

கேள்வி: பொதுக்குழுவில் தீர்மானங்கள் வாசிப்பதற்கு முன்பாக இறுதி முடிவு எடுத்த காரணத்தினால் இந்த பொதுக்குழுவை தள்ளி வைக்கலாம், பேச்சுவார்த்தை நடத்தலாம் என்று கடிதம் எழுதுகிறாரோ. பேச்சுவார்த்தைக்கு கூட முன் வராததற்கு என்ன காரணம்.

பதில்: உட்கட்சி விவகாரத்தை நீதிமன்றத்திற்கு கொண்டு சென்றது யார். முதலில் இது தொடர்பாக நீதிமன்றம் செல்லலாமா ஏதுவாக இருந்தாலும் அதிகாரம் படைத்தது பொதுக்குழு. அந்த பொதுக்குழு என்ன முடிவு எடுக்கின்றதே அதற்கு கட்டுப்படுவது தான் நல்ல தலைவருக்கு அழகு.

நல்ல தொண்டனுக்கு அழகு. அதற்கு கட்டுப்படாமல் நீதிமன்றத்திற்கு சென்று குழப்பத்தை ஏற்படுத்தி அதன் மூலம் கட்சியினருக்கு மனஉளைச்சல் ஏற்படுகிறது என்றால் இதற்கு காரணம் ஓ.பன்னீர்செல்வம் தானே. பல முறை பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இதுகுறித்து முன்னாள் அமைச்சர் உதயகுமார் பேட்டி அளித்துள்ளார். எத்தனை முறை பேச்சுவார்த்தைக்கு கலந்து கொண்டு அதில் முடிவு எட்டப்படாத எல்லாம் யாரால் உருவானது. அவர்தான் அனைத்திற்கும் காரணம் ( ஓ.பன்னீர்செல்வம்).

கேள்வி: .நேரடி பேச்சுவார்த்தைக்கு ஓபிஎஸ் தயார் என்றும் ஆனால் அதற்கான பதில் எதுவும் எதிர்க்கட்சி தலைவரிடமிருந்து வரவில்லை என்று ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றார்களே.

பதில்: எல்லாவற்றிற்கும் ஒரு காரணத்தை உருவாக்கி விட்டு இப்போது நேரடி பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் இதனை தொண்டர்கள் ஏற்றுக்கொள்வார்களா. நீதிமன்றத்திற்கு சென்று விடிய, விடிய உத்தரவை பெற்றது யார்.

தமிழகம் முழுவதும் இருந்து பொதுக்குழு உறுப்பினர்கள் சென்னையில் வந்து தங்கியுள்ளார்கள். 23 தீர்மானத்திற்கு மேல் போகக்கூடாது என்ற உத்தரவை வாங்கியது யார்.

மன உளைச்சலை தொண்டர்களுக்கு ஏற்படுத்தி விட்டு, எல்லாவற்றுக்கும் நீங்கள் (ஓ.பன்னீர்செல்வம் ) காரணமாக இருந்துவிட்டு, இப்போது பேச்சுவார்த்தைக்கு தயார் என்றால் இது தொண்டர்களை ஏமாற்றும் செயலாகத்தான் நிச்சயமாக பார்க்க முடியும்.

கேள்வி: ஓ.பன்னீர்செல்வம் பொருளாளராக இருக்கிறார். அவர் நீதிமன்றத்திற்கு சென்று கட்சி தொடர்பாக மனு தாக்கல் செய்ய முடியுமா?

பதில்: நானாக இருந்தாலும் சரி, தலைமைக்கழக நிர்வாகியாக இருந்தாலும் சரி அனைவரும் பொதுக்குழுவிற்கு கட்டுப்பட்டவர்கள். பொதுக்குழு எடுக்கும் முடிவு தான் இறுதி முடிவு. எனவே அதற்கும் நான் போக முடியாது.

கேள்வி: பொருளாளர் அழைக்கப்படுவாரா.

பதில்: ஒருங்கிணைப்பாளர்கள் பதவி காலாவதி ஆகிவிட்ட நிலையில்,தலைமை கழக நிர்வாகிகள் கேட்டுக்கொண்டதன் படி ஒரு கூட்டம் தலைமைக்கழகத்தில் எடப்பாடியார் நடத்தினார். அந்த கூட்டத்திற்கே அவர் வரவில்லையே. தலைமைக்கழக கூட்டத்திற்கு அழைப்பு அனுப்பட்டும் அவர் (ஓ.பன்னீர்செல்வம் ) வரவில்லையே. அவர் பொதுக்குழுவிற்கு அழைக்கப்படுவாரா இல்லையா என்பதை கட்சி முடிவு செய்யும்

கேள்வி: மகாராஷ்டாவில் நடைபெற்ற சம்பவங்களை அ.தி.மு.க எப்படி பார்க்கின்றது.

பதில்: பெரும்பான்மையான சட்டமன்ற உறுப்பினர்கள் முடிவு எடுப்பது தான் நடக்கும். ஆனால் இப்போது தமிழகத்திற்குள் வருவோம். இன்றைக்கு கரூரில் முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் அமைச்சர் செந்தில்பாலாஜி ஒரு பிரமாண்டத்தை ஏற்படுத்தி இன்னொரு பிரமாண்டத்தை ஏற்படுத்த போகிறாராம்.

அது என்ன பிரமாண்டம் என்று தெரிய வில்லை. ஒரு வேளை ஆட்சி கவிழ்ப்பு பிரமாண்டமா. இந்த பிரமாண்டத்தைத் தான் இவர் சூசகமாக சொல்கிறாரா,.செந்தில் பாலாஜி ஒரு டார்கெட்டை பிக்ஸ் செய்துவிட்டால் அதனை அடையாமல் விடமாட்டார்.போதும்.மகாராஷ்டிரா மாதிரி இந்த ஆட்சி கவிழ்வதற்கு செந்தில் பாலாஜியும், சேகர்பாபுவும் போதும்.

கேள்வி: தமிழகத்தின் ஷிண்டே யார்.

பதில்: இந்த கேள்வியை முதல்வரிடம் தான் கேட்க வேண்டும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் தெரிவித்தார்.