கோவை

முதலமைச்சராக எடப்பாடியார் மீண்டும் அரியணையில் அமர்வார்

கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ உறுதி

கோவை,

கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பதவியேற்பார். அவர் முதலமைச்சராக மீண்டும் அரியணையில் அமர்வார் என்று கோவை மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. உறுதியுடன் கூறி உள்ளார்.

கோவை இதயதெய்வம் மாளிகையில் கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சரும், எதிர்க்கட்சி கொறடாவுமான எஸ்.பி.வேலுமணி வழிகாட்டுதலின்படி மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ தலைமையில் மாநகர் மாவட்ட கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் எம்.எல்.ஏ. பேசியதாவது:-

தீயசக்தி கருணாநிதியை எதிர்த்து புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரால் உருவாக்கப்பட்டு புரட்சித்தலைவி அம்மா அவர்களால் ஒன்றரை கோடி தொண்டர்கள் கொண்ட மாபெரும் இயக்கமாக உருவாக்கப்பட்ட கழகத்தை அழிக்க நினைக்கும் திமுக என்றுமே நமக்கு எதிரி தான். சாதாரண தொண்டரும் தலைமைப்பதவிக்கு வர முடியும் என்றால் அது அ.தி.மு.க.வில் மட்டுமே முடியும்.

இந்நிலையில் ரவீந்திரநாத் எம்.பி தி.மு.க.வை பாராட்டுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. கழகத்தில் ஒற்றைத்தலைமையாக கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் வர வேண்டும் என்பதே அனைவரின் விருப்பம்.

ஆகவே வருகின்ற பொதுக்குழுவில் கழக உறுப்பினர்களின் கோரிக்கை ஏற்று புரட்சித்தலைவர் எம்ஜிஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகியோரின் வழியில் சிறப்பான ஆட்சி நடத்திய முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் கழக பொதுச்செயலாளர் பதவியை ஏற்று கழகத்தை வழி நடத்த வேண்டும் எனவும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. அவரது தலைமையில் மீண்டும் கழக ஆட்சி அமையும் என்பதை மாநகர் மாவட்ட கழகம் சார்பில் உறுதி ஏற்கிறோம்.

இவ்வாறு மாநகர் மாவட்ட கழக செயலாளர் அம்மன் கே.அர்ச்சுணன் பேசினார்.