சிறப்பு செய்திகள்

மகளிர் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.14,000 கோடி கடன் வழங்க இலக்கு – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

தமிழ்நாடு சட்டமன்றப்பேரவை விதி 110-ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி சட்டப்பேரவையில் அறிக்கை ஒன்றை தாக்கல் செய்து வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:

தடையற்ற மின்சாரம் என்பது நாட்டின் வளர்ச்சியில் பெரும் பங்கு வகிக்கிறது. நடப்பாண்டில், எரிசக்தித் துறையால் மேற்கொள்ளப்பட உள்ள புதிய மின் திட்டங்கள் பற்றி இந்த அவையில் அறிவிப்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

வருவாயை பெருக்கவும், மின் நுகர்வோர்களுக்கு நிறைவான சேவையை வழங்கவும், தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளை குறைப்பதற்கும், வினைத்திறன் மிகு மின் அளவிகள் (Smart Meters) பொருத்தும் திட்டம் ஒன்று சென்னை மாநகரத்தில் உள்ள சுமார் 42 லட்சம் மின் நுகர்வோர்களுக்கு, 4 ஆயிரத்து 300 கோடி ரூபாய் செலவில் முதலில் செயல்படுத்தப்படும். இத்திட்டம் மாநிலத்தில் உள்ள பிற மாவட்டங்களில் படிப்படியாக செயல்படுத்தப்படும்.

பெருகிவரும் மின் சுமையை ஈடு செய்யும் பொருட்டு, மதுரை மாவட்டம், அழகர்கோவில் 230 கிலோ வோல்ட் துணை மின்நிலையம், 400 கிலோ வோல்ட் துணை மின்நிலையமாகவும், கோயம்புத்தூர் மாவட்டம் இருகூர் மற்றும் மதுரை மாவட்டம் திருப்பாலையில் உள்ள 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் 230 கிலோ வோல்ட் துணை மின்நிலையங்களாகவும் தரம் உயர்த்தப்படும். சிவகங்கை மாவட்டம் அரசனூரில் ஒரு புதிய 230 கிலோ வோல்ட் துணை மின் நிலையம் அமைக்கப்படும்.

இவை தவிர, தடையில்லா மின்சாரத்தை மின் நுகர்வோருக்கு தொடர்ந்து வழங்கிடும் பொருட்டு, 22 எண்ணிக்கையிலான 110 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் பல்வேறு மாவட்டங்களில் அமைக்கப்படும். இப்பணிகள் ஆயிரத்து 998 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

இயற்கை சீற்றங்களின் போது கடலோர மாவட்டங்களில் மின் கம்பங்கள் சாய்ந்து, அதனால் மின் விநியோகம் தடைபடும் சூழ்நிலை உருவாகிறது. இந்நிலையை களைந்து சீரான மின் விநியோகத்தை உறுதி செய்யும் வகையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், ராமநாதபுரம், கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில், 33 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களுக்கு மின்சாரம் கொண்டு செல்லும் மின் பாதைகளில், சுமார் 200 கிலோ மீட்டர் நீள பாதை, 300 கோடி ரூபாய் செலவில் புதைவடங்களாக மாற்றப்படும்.

மின் பகிர்மான கட்டமைப்பை மேலும் வலுப்படுத்த, 23 இடங்களில் புதிய 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும். மேலும், செயல்பாட்டில் இருக்கும் 33/11 கிலோ வோல்ட் துணை மின் நிலையங்களில் உள்ள 13 மின் மாற்றிகள் கூடுதலாகவோ / திறன் உயர்த்தியோ, அமைக்கப்படும். இப்பணிகள் 187 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும் என்பதை இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறையின் மூலம் பின்வரும் அறிவிப்புகளை வெளியிடுகின்றேன்:-

ஊரகப் பகுதிகளில் உள்ள குறுகலான தெருக்கள் மற்றும் பாதைகளை தரம் உயர்த்தும் பொருட்டு, 2020-21ஆம் நிதி ஆண்டில் 350 கி.மீ. நீளத்திற்கு சிமெண்ட் கான்கிரீட் சாலைகளும், 200 கி.மீ. நீளத்திற்கு பேவர் பிளாக் சாலைகளும், 213 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும். மேலும் ஊரகப் பகுதிகளில் போக்குவரத்தை மேம்படுத்தவும், நீர்நிலைகளைக் கடந்திடவும் ஏதுவாக 850 குறு பாலங்களும், 350 சிறு பாலங்களும் என மொத்தம் 1,200 சிறு, குறு பாலங்கள் 170 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

ஆதிதிராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அனைத்து அடிப்படை வசதிகளையும் மேம்படுத்திட வேண்டும் என்ற உயரிய நோக்கில், பல்வேறு திட்டங்களை ஒருங்கிணைத்து உரிய நிதி ஒதுக்கீடு செய்து, அதனை செயல்படுத்தும் விதத்தில், 2020-21ஆம் ஆண்டைய நிதிநிலை அறிக்கையில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. அதன்படி, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம், மத்திய, மாநில நிதிக் குழுவின் நிதி மற்றும் அம்மா ஆதிதிராவிடர் குடியிருப்பு மேம்பாட்டு திட்ட நிதி ஆகியவற்றில் இருந்து 2,500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

இந்நிதியில் இருந்து, ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகளில் குடிநீர் வசதி, இணைப்புச் சாலை வசதி, சிமெண்ட் / பேவர் பிளாக் சாலை வசதி, தெரு விளக்குகள், வடிகால் வசதி, மயான மேம்பாடு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் இப்பேரவைக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

ஊரகப் பகுதிகளில் உள்ள குக்கிராமங்களில் இருந்து அருகில் உள்ள சந்தைகள், பள்ளிகள் மற்றும் மருத்துவமனைகள் போன்றவற்றை பொதுமக்கள் எளிதாக சென்றடையும் வகையில், பிரதான மற்றும் இணைப்புச் சாலைகளை மேம்படுத்தும் பொருட்டு, ஆயிரத்து 44 கி.மீ. நீளமுள்ள 299 ஊரகச் சாலைகள் 553.07 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேம்படுத்தப்படும்.

ஊரகப் பகுதிகளிலுள்ள குக்கிராமங்கள் மற்றும் இணைக்கப்படாத பகுதிகளுக்கு இணைப்புச் சாலை வசதி ஏற்படுத்திட, 2020-21ஆம் நிதி ஆண்டில், 1,150 கி.மீ. நீளத்திற்கு ஓரடுக்கு கப்பிச் சாலைகள் 246 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

ஊரகப் பகுதிகளிலுள்ள வாய்க்கால்கள், ஓடைகள் மற்றும் கால்வாய்களின் குறுக்கே 2020-21ஆம் ஆண்டில் 10 ஆயிரம் சிமெண்ட் கான்கிரீட் தடுப்பணைகள் 460 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.ஊரகப் பகுதிகளில் உள்ள பள்ளிக் கட்டடங்களுக்கு 2020-21ஆம் நிதி ஆண்டில் 650 கி.மீ. நீளத்திற்கு 440 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சுற்றுச்சுவர் கட்டப்படும்.

ஊரகப் பகுதிகளில் கால்நடைகளை பாதுகாத்திட, 2020-21ஆம் நிதியாண்டில், 9 ஆயிரம் மாட்டுக் கொட்டகைகளும், 6 ஆயிரம் ஆட்டுக் கொட்டகைகளும் என மொத்தம் 15 ஆயிரம் கொட்டகைகள் 258.60 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டித் தரப்படும்.
விவசாய நிலங்களில் பாசன வசதிகளைப் பெருக்கி, விளை நிலங்களின் பரப்பினை அதிகரிக்க, 2020-21 ஆம் ஆண்டில் 500 தனி நபர் கிணறுகள் தலா 7 லட்சத்து 48 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், 500 சமுதாய கிணறுகள் தலா 12 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலும், என மொத்தம் ஆயிரம் கிணறுகள் 98 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

30 ஆண்டுகள் கடந்த நிலையில், மிகவும் பழுதடைந்து, பயன்பாடின்றி உள்ள 500 ஊராட்சி மன்ற அலுவலகங்களுக்கு தலா 22 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டித் தரப்படும்.2019-20ஆம் ஆண்டில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு 12 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வங்கிக் கடன் இணைப்பு என இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 13 ஆயிரத்து 301 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, 2020-21ஆம் ஆண்டு 14 ஆயிரம் கோடி ரூபாய் வங்கிக் கடன் இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

2020-21ஆம் நிதியாண்டில், ஊரகப் பகுதிகளில் சுமார் ஒரு லட்சத்து 25 ஆயிரம் முதியோர் பயன் பெறும் வகையில், 5 முதல் 10 உறுப்பினர்களைக் கொண்ட 12 ஆயிரத்து 525 “முதியோர் சுய உதவிக் குழுக்கள்” ஊராட்சிக்கு ஒன்று என்ற அளவில் ஏற்படுத்தப்பட்டு, “ஆதார நிதி”யாக குழு ஒன்றுக்கு 15,000 ரூபாய் வீதம் 18 கோடியே 79 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கப்படும்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.