தொண்டர்களின் ஆதரவோடு எடப்பாடியார் கழக பொதுச்செயலாளராக பதவி ஏற்பார்

திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளர் சி.கார்த்திகேயன் பேச்சு
திருச்சி
தனக்கு என்ன ஆதரவு இருக்கின்றது என்பதை ஓ.பன்னீர்செல்வம் சிந்தித்து பார்ப்பது நல்லது. தொண்டர்களின் ஆதரவோடு கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார் என்று திருச்சி மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், திருச்சி ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் கூறி உள்ளார்.
திருச்சி ஒத்தக்கடை கன்டோன்மென்ட் அருகில் உள்ள மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் ஏர்போர்ட் பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், திருச்சி ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் ஏற்பாட்டில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட கழக அவைத்தலைவர் மலைக்கோட்டை வி.அய்யப்பன் தலைமை வகித்தார். ஏர்போர்ட் பகுதி கழக செயலாளர் ஏர்போர்ட் விஜி முன்னிலை வகித்தார்.
இக்கூட்டத்தில் மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், திருச்சி ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் பேசியதாவது:-
முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியார் ஒற்றைத்தலைமை ஏற்க வேண்டும். எடப்பாடியார் ஒரு கடைக்கோடி தொண்டனாக, கிளை கழக செயலாளராக இருந்து இன்று தமிழக முதலமைச்சர் வரை வந்திருக்கிறார் என்று சொன்னால் நம் கழகத்தில் மட்டும் தான் இது போன்ற பதவிகளுக்கு வர முடியும். வேறு எந்த கட்சியிலும் வர முடியாது. அப்படிப்பட்ட கட்சி தான் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.
கழகத்தில் சில பிரச்சினைகள் அவ்வப்போது ஏற்பட்டாலும் இந்த கழகத்தை விட்டு கழக தொண்டர்களும் சரி, நிர்வாகிகளும் சரி மாற்றுக்கட்சிக்கு செல்வது கிடையாது. வியாபார நோக்கத்தோடு செயல்படும் ஒருசிலர் மட்டும் தான் அவ்வாறு சொல்வர். ஒவ்வொரு கழக தொண்டனின், நிர்வாகிகளின் உடலில் ஓடும் ரத்தம் முழுவதிலும் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர், புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருவரும் தலைவர்களின் கொள்கைகள், உணர்வுகள் கலந்துள்ளன.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் காலத்திலும் சரி, புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் சரி, நாம் தவறு செய்ய நினைத்தாலும் முடியாது. அதேபோல், கழகத்தை விட்டு வெளியேற நினைத்தாலும் நம்மால் முடியாது. அந்த இருபெரும் தலைவர்களின் வழியில் வந்தவர் தான் எடப்பாடியார்.
புரட்சித்தலைவி அம்மா இருந்த பொழுது ‘கலைஞர் கருணாநிதி’ என்று நம்மால் சொல்ல முடியுமா? அதுபோன்று இதுவரை எதுவும் நடக்காத நிலையில் கடந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் ஓ.பன்னீர்செல்வம் “எனது தந்தை கருணாநிதியின் தீவிர பக்தர்” என்று சட்டசபையில் பேசுகிறார். கழக பொதுக்குழு நடக்க இருந்த நிலையில் பொதுக்குழுவை தடுக்கின்ற விதத்தில் காவல் நிலையத்திற்கும், நீதிமன்றத்திற்கும் ஓ.பன்னீர்செல்வம் செல்லலாமா?
இப்படி ஓ.பன்னீர்செல்வம் நீதிமன்றத்தை நாடிய பொழுது நீதிமன்றம் பொதுக்குழுவை நடத்தலாம் என்று தீர்ப்பு வழங்குகிறது. பிறகு அந்த தீர்ப்பை எதிர்த்து நடு சாமத்தில் இரண்டு நீதிபதிகள் முன் மீண்டும் மேல் முறையீடு செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ஓ.பன்னீர்செல்வம் தி.மு.கவோடு கைகோர்த்து செயல்பட்டு வரும் காரணத்தினால் விடியற்காலை 4 மணிக்கு பொதுக்குழுவில் 23 தீர்மானங்கள் மட்டும் தான் நிறைவேற்ற வேண்டும் என்று தீர்ப்பு வருகிறது.
நம் கழகத்தில் உள்ள அனைவரும் ஜாதி, மதம் உள்ளிட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கு அப்பாற்பட்டு தான் நாம் கழகத்தில் இருக்கின்றோம். நம் சொந்தம், பந்தம் என்பதெல்லாம் நம் வீட்டோடு தான். இங்கு நாம் அனைவரும் ஒன்று தான். கழகம் தான் நம்மளை காக்கின்றது.
நம் அனைவரையும் கழகம் தான், கழக கொள்கைகள் தான் ஒன்றிணைத்து நம்மை வழி நடத்திக கொண்டிருக்கின்றது. நம் கழகத்தினருக்கு ஏதாவது ஒரு ஆபத்து என்றால், பிரச்சினையென்றால் நம் கழகத்தினர் ஓடி வந்து நம் கழகத்தினரை நாம் காக்க வேண்டும் என்று உதவி செய்வார்கள்.
இந்த உறவு எங்கிருந்து வருகிறது என்று சொன்னால் பாதிக்கப்பட்டவர் நமது கழத்தை சேர்ந்தவர் என்ற உணர்விலிருந்து தான் வருகின்றது. நம் கழகத்தை நாம் ரசித்து, ரசித்து வளர்க்க வேண்டும். அதுதான் நம்முடைய கடமை.
பொதுக்குழுவுக்கு தடை வாங்க முயற்சித்தார்கள். தொடர்ந்து அவர்கள் பொதுக்குழுவுக்கும் வந்தார்கள். அங்கே வருகை தந்திருந்த 2615 பொதுக்குழு உறுப்பினர்களில் 4 பேர் மட்டும் தான் அவர்களுடன் வந்தார்கள்.
அந்த பொதுக்குழு கூட்டத்தில் அனைவருமே ஒற்றைத் தலைமை தான் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்கள். ஓ.பன்னீர்செல்வம் உடன் வந்த 4 பேர் மட்டும் தான் வெளிநடப்பு செய்தார்கள்.
நாம் யாராவது அவர்களை வெளியேறுங்கள் என்று சொன்னோமா? இல்லை. ஆனால் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 4 பேர்களை நாம் வெளியேறும் படி சொன்னதாக ஓ.பன்னீர்செல்வம் சொல்கிறார்.
தி.மு.க புனைந்த பொய் வழக்கின் காரணமாகத்தான் புரட்சித்தலைவி அம்மா சிறைச்சாலைக்கு சென்றார். அதன் காரணமாகவே தான் தற்காலிக முதலமைச்சராக ஓ.பன்னீர்செல்வம் இருந்தார்.
ஆனால், எடப்பாடியார் நிரந்தர முதலமைச்சராக இருந்தார். புரட்சித்தலைவி அம்மா ஓ.பன்னீர்செல்வத்தை தற்காலிக முதலமைச்சராக்கிய நன்றியை எண்ணிப்பார்த்து, அதனை கருத்தில் கொண்டு, விட்டுகொடுத்து ஓ.பன்னீர்செல்வம் சொல்ல வேண்டும்.
ஓ.பன்னீர்செல்வம் தாம் எங்கிருந்து வந்தோம் என்று பின்னால் திரும்பிப் பார்த்தார் என்று சொன்னால் எந்த யோசனையும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு வராது. யார் வேண்டுமானாலும் உங்களுக்கு சொல்லிக் கொடுக்கலாம், தனக்கு என்ன தகுதி இருக்கின்றது, தொண்டர்கள் மத்தியில் என்ன ஆதரவு இருக்கின்றது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அப்படியே சிந்திக்காமல் மீண்டும், மீண்டும் மறுபடியும், மறுபடியும் உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் என்று தொடர்ந்து எத்தனை வழக்குகள் தொடுத்தாலும் வருகின்ற 11-ம்தேதி திட்டமிட்டபடி பொதுக்குழு கூட்டம் நடக்கும்.
பொதுக்குழு கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன முடிவெடுக்கிறார்களோ அதை நான் ஏற்றுக்கொள்கிறேன் என்று தான் எடப்பாடியார் கூறுகிறார். எடப்பாடியாரை பொறுத்தவரை குடும்ப அரசியல் செய்யவில்லை.
எடப்பாடியாரை பொறுத்தவரையில் நான் எப்படி கீழ் மட்டத்திலிருந்து இந்த நிலைக்கு உயர்ந்தேனோ அதேபோல் கழகத்தில் உள்ள ஒவ்வொரு தொண்டனும் உயர்ந்த நிலைக்கு வரவேண்டும் என்று தான் செயல்பட்டு கொண்டிருக்கிறார்.
எடப்பாடியார் ஒவ்வொரு முறையும் திருச்சிக்கு வருகின்ற பொழுதெல்லாம் நிர்வாகிகளாகிய நீங்கள் சிறப்பான வரவேற்பை அளித்து உள்ளீர்கள். எடப்பாடியார் ஒரு குழந்தையை போன்றவர். என்றுமே அவர் கோபப்பட்டது கிடையாது. எடப்பாடியார் தன்னை கழகத்திற்கு பொதுச்செயலாளராக ஆக்குங்கள் என்று என்றைக்காவது சொன்னாரா? இல்லவே இல்லை.
கழகத்தின் அடிமட்ட உறுப்பினர்களான தொண்டர்கள் தான் இரட்டை தலைமை இருந்தால் கழகம் சிறப்பாக இருக்காது. கழகத்திற்கு ஒற்றை தலைமை தான் மீண்டும் வேண்டும். அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடியார் பொருத்தமானவராக இருக்கிறார். எனவே, எடப்பாடியார் தான் கழக பொதுச்செயலாளராக வரவேண்டும் என்று தொண்டர்கள் விரும்புகின்றார்கள்.
எடப்பாடியார் கடந்த 4 ஆண்டு காலம் புரட்சித்தலைவி அம்மா வழியில் சிறப்பான கழக ஆட்சியை நடத்தி உள்ளார். அந்த சிறந்த நல்லாட்சியின் காரணமாக எடப்பாடியார் மக்கள் மனதில் நல்ல ஒரு இடத்தை பிடித்துள்ளார். எடப்பாடியார் கழகத்திற்கு தலைமை ஏற்றால் மட்டும் தான் நாம் நெஞ்சை நிமிர்த்தி கழக கரை வேட்டியை கட்டி நடக்க முடியும்.
எடப்பாடியார் கழக தலைமை ஏற்க வேண்டும் என்பதற்காக ஆவலோடு திரளான கழக தொண்டர்கள் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு உள்ளீர்கள். இங்கே கூடி இருக்கும் கழக தொண்டர்களும், நிர்வாகிகளும் பொதுக்குழு நல்லபடியாக நடக்க வேண்டும்.
எடப்பாடியார் கழக தலைமை ஏற்க வேண்டும் என்று நீங்கள் மனதார நினைத்தாலே வருகின்ற 11-ம் தேதி நல்லபடியாக பொதுக்குழு கூட்டம் நடந்து விடும். தொண்டர்களின் ஆதரவோடு ஒருமனதாக கழக பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார்.
இனி வருகின்ற சட்டமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி, நாடாளுமன்ற தேர்தலாக இருந்தாலும் சரி கழகம் 100க்கு 100 சதவீதம் வெற்றிபெறும் என்று தி.மு.கவினரே சொல்கின்றார்கள். ஏனென்றால் தி.மு.க ஆட்சிக்கு வந்து ஒரு வருடம், இரண்டு மாதங்கள் ஆகியும் மக்களுக்கு எந்த நன்மையும் கிடைக்கவில்லை.
நாங்கள் இன்னும் கஷ்டப்பட்டு கொண்டுதான் இருக்கின்றோம் என்று தி.மு.கவினரே சொல்கிறார்கள். ஆக, தி.மு.கவை சார்ந்தவர்களே தங்கள் கட்சி இனி வெற்றி பெறாது என்று முடிவு செய்து விட்டார்கள்.
தி.மு.க ஆட்சியில் மக்கள் நலப்பணிகள் எந்த இடத்திலும் நடக்கவில்லை. பொங்கல் பரிசு கொடுத்தது உட்பட தி.மு.கவின், எல்லா செயல்பாடுகளுமே மக்கள் மத்தியில் தி.மு.க ஆட்சிக்கு கெட்ட பெயரை தான் உருவாக்கி கொடுத்திருக்கிறது.
ஆக, உறுதியாக 2016-ம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளில் கழகம் வேட்பாளர்கள் அமோக வெற்றி பெறுவார்கள். அதனைத்தொடர்ந்து வரும் சட்டமன்ற தேர்தலில் கழகம் அமோக வெற்றிபெற்று எடப்பாடியார் மீண்டும் தமிழக முதலமைச்சராக பதவியேற்பார். மக்கள் அனைவருக்கும் தொடர்ந்து ஏராளமான நன்மைகள் செய்வார்கள்.
இவ்வாறு மாநகர் மாவட்ட மாணவர் அணி செயலாளரும், திருச்சி ஆவின் சேர்மனுமான பொறியாளர் சி.கார்த்திகேயன் பேசினார்.