தற்போதைய செய்திகள் மற்றவை

பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார்-கீர்த்திகா முனியசாமி திட்டவட்டம்

மதுரை

ஒன்றரை கோடி தொண்டர்களின் எண்ணம் நிறைவேறும் வகையில் கழகத்தின் பொதுச்செயலாளராக எடப்பாடியார் பொறுப்பேற்பார் என்று கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி கூறி உள்ளார்.

ராமநாதபுரம் மாவட்ட கழகம் சார்பில் ஆலோசனை கூட்டம் பரமக்குடியில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட அவைத்தலைவர் சாமிநாதன் தலைமை தாங்கினார். கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி முன்னிலை வகித்தார். இந்த கூட்டத்தில் ராமநாதபுரம் மாவட்ட கழக செயலாளர் எம்.ஏ.முனியசாமி தீர்மானங்களை நிறைவேற்றி பேசினார்.

இக்கூட்டத்தில் கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசியதாவது:-

புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பெண்கள் சமுதாயத்திற்கு எண்ணற்ற திட்டங்களை வழங்கினார். பெண் சமுதாயம் தலை நிமிர்ந்து நடந்திட பல்வேறு திட்டங்களை செயல்படுத்தினார். குறிப்பாக பெண்களுக்கு மகளிர் காவல் நிலையங்கள், பெண் கமாண்டோ படைகள், மகளிர் சுய உதவிக்குழுக்கள்,

ஏழை பெண்களுக்கு தாலிக்கு தங்கம் திட்டம், பெண்களுக்கு விலையில்லா மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறிகள் இப்படி திட்டங்களை சொல்லிக்கொண்டே போகலாம். அதனை தொடர்ந்து அம்மாவிற்கு பின் ஆட்சி பொறுப்பேற்ற எடப்பாடியார் அம்மாவின் திட்டங்களை எல்லாம் நிறைவேற்றினார்.

குறிப்பாக பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகன திட்டத்தை தொடங்கி வைத்து மூன்று லட்சம் பெண்களுக்கு வழங்கினார். அதேபோல் புரட்சித்தலைவி அம்மா செயல்படுத்திய தாலிக்கு 8 கிராம் தங்கம் மற்றும் திருமண உதவிகள் திட்டத்தின் மூலம் 12.50 லட்சம் ஏழை பெண்கள் பயன்பெற்றனர்.

குறிப்பாக உள்ளாட்சி தேர்தலில் பெண்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று அம்மாவின் கனவு திட்டமாகும். அதை செயல்படுத்தியவர் எடப்பாடியார் ஆவார்.

கடந்த சில நாட்களாக தலைமை கழக நிர்வாகிகள் முதல் மாவட்ட கழக செயலாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நகர, ஒன்றிய, பேரூர், கிளை கழக நிர்வாகிகள் அனைவரும் ஒற்றை தலைமை தான் வர வேண்டும் என்று கூறி வருகின்றனர். இந்த கருத்து இந்த இயக்கத்தில் உள்ள ஒன்றரை கோடி தொண்டர்களின் கருத்தாகும்.

ஏனென்றால் இந்த இயக்கத்தை வழிவோடும், பொலிவோடும் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் சொல்வது போல் இந்த இயக்கம் இன்னும் நூறாண்டு காலம் மக்கள் பணியாற்ற வேண்டும் என்ற அம்மாவின் கனவை எல்லாம் நிறைவேற்ற வேண்டுமென்றால் ஒற்றை தலைமை அவசியம். அந்த ஒற்றை தலைமைக்கு எடப்பாடியார் தான் வர வேண்டும் என்று அனைவரும் கூறி வருகின்றனர்.

தற்பொழுது இந்த கூட்டத்தில் கூட பங்கேற்ற கழக செயல்வீரர்களும், கழக செயல் வீராங்கனைகளும் ஒரு வரலாற்று மிக்க தீர்மானத்தை நிறைவேற்றினர். வருகின்ற பொதுக்குழுவில் புரட்சித்தலைவி அம்மாவின் வழிப்படி தீய சக்தி தி.மு.க.வை எதிர்க்கும் வகையில் சரியான தலைவராக எடப்பாடியார் தேர்வு செய்யப்படுவது நிச்சயம்.

அதுமட்டுமல்லாது தற்போது மக்கள் தி.மு.க மீது வெறுப்பில் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் கழகத்திற்கு வாக்களிக்க தயாராக உள்ளனர்.

தற்போதுள்ள சூழ்நிலையில் ஒற்றை தலைமை தான் சிறப்பான தீர்வு என்று மக்களும் முடிவெடுத்து வருகிறார்கள். ஆகவே கழகத்தின் ஒன்றரை கோடி தொண்டர்கள் எண்ணம் நிறைவேறும் வகையில் எடப்பாடியார் பொதுச்செயலாளராக பொறுப்பேற்பார்.

இவ்வாறு கழக மகளிர் அணி இணை செயலாளர் கீர்த்திகா முனியசாமி பேசினார்.