புதுக்கோட்டை

புதுக்கோட்டையில்அதிக விலைக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி விற்ற மருந்து கடைக்கு சீல்.

புதுக்கோட்டை:-

தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் கொரோனா வைரஸ் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்க வேண்டும் என்று அரசு உத்தரவிட்டது. இதையடுத்து புதுக்கோட்டையில் அரசு ராணியார் மகப்பேறு மருத்துவமனை கொரோனா சிறப்பு சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு செய்யப்பட்டுள்ள வசதிகள் குறித்து கலெக்டர் உமா மகேஸ்வரி இன்று காலை ஆய்வு செய்தார்.

பின்னர் புதுக்கோட்டை கீழராஜவீதியில் உள்ள மருந்துக்கடைகளில் ஆய்வு செய்தார். அப்போது அங்குள்ள ஒரு மருந்து கடையில் கூடுதல் விலைக்கு முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி மருந்து விற்பனை செய்யப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கடைக்கு கலெக்டர் சீல் வைத்து அதிரடி நடவடிக்கை எடுத்தார்.

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வெளிநாடுகளில் இருந்து 292 பேர் வந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பில் உள்ளனர். இதில் ஒருவரின் ரத்த மாதிரி பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால் அதில் அவருக்கு கொரோனா பாதிப்பு இல்லை என்பது தெரியவந்துள்ளது.

வருகிற 22-ந்தேதி பொது மக்கள் தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். வீட்டில் இருந்து வெளியே வரக்கூடாது என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். எனவே அன்றைய தினம் பொது மக்கள் அனைவரும் வீட்டிலேயே இருக்க வேண்டும். மருந்து கடைகளில் கூடுதல் விலைக்கு முகக்கவசம், கிருமி நாசினி மருந்து விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.