தற்போதைய செய்திகள்

இஸ்லாமிய சமுதாயத்திற்கு நல்ல திட்டங்களை முதல்வர் செயல்படுத்தி வருகிறார்- அமைச்சர் நிலோபர்கபீல் பேச்சு

வேலூர்

இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமுதாய மக்கள் பயன்பெறும் வகையிலும் நல்ல திட்டங்கள் நல்ல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார் என்று ஹஜ் குழு கூட்டத்தில் அமைச்சர் நிலோபர்கபீல் தெரிவித்தார்.

தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் கூட்டம் ஹஜ் கமிட்டி தலைவர் ஏ.அப்துல் ஜப்பார் தலைமையில் நடைபெற்றது. இதில் அனைத்து உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர்கபீல் கலந்து பேசியதாவது:-

அம்மாவின் அரசை சிறப்பாக நடத்தி வரும் முதலமைச்சர் எடப்பாடியார் அனைத்து சமுதாய மக்களின் எதிர்பார்ப்பை பாகுபாடின்றி நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில் இஸ்லாமிய பெருமக்கள் பயன்பெறும் வகையில் ஹஜ் செல்லும் ஹாஜிக்களுக்கு மானியமாக ரூ.6 கோடியை 2018 ல் அறிவித்தார். இன்று அதன்மூலம் ஹஜ்க்கு செல்லும் ஒவ்வொரு ஹாஜிகளும் பயன்பெற்று வருகின்றனர்.

தற்போது மேலும் இஸ்லாமியர்களுக்கு சிறப்பு சலுகைகள் அறிவித்து உள்ளார். ஹஜ் செல்லும் ஹாஜிக்கள் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தங்களின் பயண தேதிக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே சென்னைக்கு வந்தாக வேண்டிய நிலை உள்ளது. அவர்கள் சென்னையில் தங்குவதற்கு தனியாரின் ஹஜ் ஹவுஸ் ஒன்று மட்டும் உள்ளது. தற்பொழுது நாள் ஒன்றுக்கு 4 விமானங்கள் மூலம் ஆயிரம் பேருக்கு மேல் செல்ல உள்ளனர்.

எனவே அவர்கள் அனைவரும் தங்குவதற்கு போதிய இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகின்றனர். அனைவருக்கும் போதிய இடம் அளிக்கும்வகையில் தமிழக மாநில ஹஜ் குழு மூலம் தங்கும் விடுதி கட்ட நிதி அளிக்க வேண்டும் என்று முதல்வரிடம் கோரிக்கை வைத்தோம். அதனை தாயுள்ளத்தோடு ஏற்று ரூ.15கோடியை ஹாஜிக்கள் தங்குவதற்கு கட்டிடம் கட்ட அறிவித்தார். அத்தோடு உலமாக்கள் ஓய்வூதியம் ரூ.1500 ல் இருந்து 3 ஆயிரமாக உயர்த்தி அறிவித்தார். அதேபோன்று உலமாக்கள் தங்கள் இல்லத்தில் இருந்து தொழுகை நடத்த பள்ளிவாசல் சென்று வர ஏதுவாக இருசக்கர வாகனம் வாங்க ரூ.25 ஆயிரம் மானியமாக தமிழக அரசு வழங்கும் என்று முதல்வர் அறிவித்தார்.

மேலும் தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு இதுவரை ரூ.60 லட்சம் ஆக இருந்த பள்ளிவாசல் மற்றும் மதர்சா ஆகியவற்றின் பராமரிப்பு தொகையை ரூ. 5 கோடியாக உயர்த்தி அறிவித்தார். இப்படி இஸ்லாமிய சமுதாயத்திற்கும், சமுதாய மக்கள் பயன்பெறும் வகையிலும் நல்ல திட்டங்கள் நல்ல அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டுள்ளார்.

இதுவரை எந்த முதல்வரும் நம் சமுதாயத்திற்கு இப்படி அறிவித்தது இல்லை. எனவே நம்முடைய இஸ்லாமிய மக்கள் சார்பாக என் மனமார்ந்த நன்றியை முதல்வர் எடப்பாடியாருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் எதிர்க்கட்சியினர் தவறான பொய்யை சொல்லி இஸ்லாமிய சமுதாய மக்களை ஏமாற்றி வருகின்றனர். அதையெல்லாம் நம்பாமல் எப்பொழுதும் போல் அம்மாவின் அரசுக்கு பேராதரவை தர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் நிலோபர் கபீல் பேசினார்.

இக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர் தமிமுன்அன்சாரி எம்.எல்.ஏ உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் செயலாளர் நஜீமுத்தீன் நன்றி தெரிவித்தார்.