தற்போதைய செய்திகள்

தண்டையார்பேட்டையில் குடிநீர் லாரி உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் – ஆர்.எஸ்.ராஜேஷ் நடத்திய பேச்சு வார்த்தையில் சுமூக உடன்பாடு

சென்னை

ஆர்.கே.நகர் பகுதிக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை பட்டேல் நகர் பம்பிங் நிலையம் மூலம் குடிநீர் வாரிய ஒப்பந்தத்தின் அடிப்படையில் நாளொன்றுக்கு 32 லாரிகள் மூலம் பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீர் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் தண்டையார்பேட்டை பட்டேல் நகர் நீரேற்று நிலையத்தில் நேற்று வழக்கமாக பொதுமக்களின் வீடுகளுக்கு சப்ளை செய்யும் குடிநீர் லாரி டிரைவர்கள் மற்றும் உரிமையாளர்கள் திடீரென வேலை நிறுத்தம் செய்தனர். அவர்களுக்கு கடந்த இரண்டரை மாதங்களாக ஒப்பந்த மாத வாடகை தொகை வழங்காததால் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதனால் பொதுமக்களுக்கு குடிநீர் விநியோகம் தடைபடும் சூழ்நிலை உருவானது.

இதனையறிந்த வடசென்னை வடக்கு (கிழக்கு) மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ். ராஜேஷ், உடனடியாக பொதுமக்களின் குடிநீர் தேவையை கருத்தில் கொண்டு பட்டேல் நகர் குடிநீர் நீரேற்று மைய்ய வளாகத்திற்க்கு சென்று குடிநீர் வழங்கல் மண்டல செயற் பொறியாளர் ஏழுமலையை வரவழைத்து வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வந்த லாரி டிரைவர்கள் மற்றும் ஏழுமலை, மூர்த்தி, வடிவேல், பூமிநாதன் உள்ளிட்ட லாரி உரிமையாளர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார்.

அவர்களுடன் நடத்திய சுமூக பேச்சு வார்த்தையில் நிலுவையில் உள்ள வாடகை தொகையை விரைந்து வழங்க ஆவனசெய்யப்படும் என உறுதியளித்ததை அடுத்து வேலைநிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது. இதையடுத்து லாரி டிரைவர்கள், குடிநீர் விநியோகம் செய்ய தொடங்கினர்.