விழுப்புரம்

தி.மு.க. அரசை கண்டித்து கழக நிர்வாகிகள் போராட்டம்-காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகை

விழுப்புரம்

கழக அரசின் திட்டப்பணிகளை முடக்கி வைத்துள்ள தி.மு.க. அரசை கண்டித்து முன்னாள் எம்.எல்.ஏ ரா.முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை கழகத்தினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

கழக ஆட்சியின்போது விழுப்புரத்தை அடுத்த காணை ஊராட்சி ஒன்றியத்தில் திட்ட பணிகளுக்கான டெண்டர் விடப்பட்டுள்ளது. ஆனால் அந்த பணிகள் அனைத்தும் தி.மு.க. ஆட்சி பொறுப்பேற்ற பின்னர் செயல்படுத்தப்படாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளது. தி.மு.க. அரசின் இந்த நடவடிக்கையை கண்டித்து விக்கிரவாண்டி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.முத்தமிழ்ச்செல்வன் தலைமையில் கழக நிர்வாகிகள் ஏராளமானோர் காணை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இந்த முற்றுகை போராட்டத்தின் போது தி.மு.க. அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். இதனால் பரபரப்பு நிலவியது.

இதுகுறித்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் இரா.முத்தமிழ்ச்செல்வன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

காணை ஊராட்சி ஒன்றியத்தில் கடந்த ஆண்டு கழக ஆட்சியின் போத முறையாக அரசின் டெண்டர் பெறப்பட்டு நடந்த தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டம், தனிநபர் கிணறு, வாய்க்கால், சாலை, குடிநீர் கிணறு, குடிமராமத்து உள்ளிட்ட பல கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடைபெற்றது.

சட்டமன்றதேர்தலையொட்டி இப்பணிகள் நிறுத்தப்பட்டன. தற்போது திமுக அரசு பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்தும் இந்த பணிகளை துவங்குவதற்கு எங்களுக்கு அனுமதி வழங்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகத்தை சந்தித்து முறையிட்டுள்ளோம். இன்று இரண்டு நாட்களில் பணிகளை தொடங்கவில்லை என்றால் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

இதுகுறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் மணிவாசகத்திடம் கேட்டபோது உயர் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். விரைவில் பணிகள் துவங்கி விடும் என்றார்.