வானகரத்தில் கழக செயற்குழு, பொதுக்குழு ஏற்பாடு-வரவேற்பு பேனர்கள் வைப்பதற்காக சாரம் கட்டும் பணி தீவிரம்
அம்பத்தூர்
வரும் 11-ம்தேதி நடைபெறும் கழக செயற்குழு பொதுக்குழு கூட்டத்திற்காக தலைவர்களை வரவேற்க பேனர்கள் வைப்பதற்கு சாரம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த பணியை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான பா.பென்ஜமின் பார்வையிட்டார்.
கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு வருகின்ற 11-ம்தேதி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் நடைபெற உள்ளது. அதற்காக கடந்த 6 தினங்களாக மேடைகள் அமைக்கும் பணி, மின் விளக்குகள் அமைக்கும் பணி, முழு வீச்சில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் நேற்று பொதுக்குழுவிற்கு வருகை தரக்கூடிய தலைவர்களை வரவேற்கும் விதமாக சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை ஓரங்களின் இருபுறங்களிலும் பேனர்கள், வரவேற்பு பதாகைகள் வைப்பதற்காக சாரங்கள் கட்டும் பணியானது நடைபெற்றது.
இதில் சுமார் 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த பணிகளை திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான, பா.பென்ஜமின் பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தி வருகிறார்.