மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் விரைவில் போராட்டம் – முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை
மக்களுக்கான அடிப்படை வசதிகளை நிறைவேற்றாத மதுரை மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து கழகம் சார்பில் சார்பில் விரைவில் போராட்டம் நடத்தப்படும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் செய்ய வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து முன்னாள் அமைச்சரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளர் செல்லூர் கே.ராஜூ, கழக மாமன்ற உறுப்பினர்களுடன், மாநகராட்சி ஆணையர் சிம்ரன் ஜித் காலோனிடம் கோரிக்கை மனு அளித்தார்.
அதன்பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
“மதுரை மாநகராட்சி பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. 4 நாட்களுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. சுகாதாரமற்ற குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருவதால் தொற்று நோய்கள் பரவுகிறது, மதுரை மாநகராட்சியில் மக்கள் தொகைக்கு ஏற்ப பாதாள சாக்கடை பணிகள் நடைபெறவில்லை,
மதுரை மாநகராட்சி வரி வருவாயை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். அ.தி.மு.க ஆட்சி காலத்தில் கொண்டு வந்த அம்ரூத் குடிநீர் திட்டத்தால் குடிநீர் தட்டுப்பாடு வராது. மதுரையில் ஓராண்டில் தி.மு.க எந்தவொரு திட்டமும் செய்யவில்லை. மதுரையில் புதிய திட்டத்திற்கு ஒரு பைசா கூட செலவு செய்யவில்லை. கலைஞர் நூலகம் தவிர எந்தவொரு திட்டத்தையும் கொண்டு வரவில்லை.
அ.தி.மு.க காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை தி.மு.க தற்போது திறந்து வைத்து வருகிறார்கள். அ.தி.மு.க உறுப்பினர்கள் வெற்றிபெற்ற வார்டுகளில் தூய்மை பணிகள் நடைபெறவில்லை. மாநகராட்சி நிர்வாகத்தை கண்டித்து விரைவில் அ.தி.மு.க சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறினார்
பேட்டியின் போது மாவட்ட கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழக துணை செயலாளர் ஜெ.ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், மாவட்ட கழக பொருளாளர் குமார், மாமன்ற எதிர்க்கட்சி தலைவர் சோலைராஜா, மாமன்ற உறுப்பினர்கள் சண்முகவள்ளி, பைக்கரா கருப்பசாமி, மாணிக்கம், மாயத்தேவன், ரூபிணிகுமார், முத்துமாரி ஜெயக்குமார், எஸ்.எம்.டி.ரவி, கிருஷ்ணமூர்த்தி, மாரிமுத்து, வசந்தாதேவி, பிரேமா, நாகஜோதி சித்தன், சொக்காயி ஆகியோர் உடனிருந்தனர்.