தற்போதைய செய்திகள்

கழகத்தை முடக்க தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது -முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் பேட்டி

திருவாரூர்,

என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை. கழகத்தை முடக்கி விடலாம் என தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது என்று முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறி உள்ளார்.

லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முடிவுற்றபின் முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்த லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை முற்றிலும் உள்நோக்கம் கொண்டது. பழிவாங்கும் நடவடிக்கையாக பார்க்கிறோம். இதை சட்ட ரீதியாக எதிர்கொள்ள முடியும். அதன்படி சந்தித்துள்ளோம். சோதனை மூலம் என்னையோ.

சாதாரண தொண்டனையோ ஒன்றும் செய்து விட முடியாது. இதன்மூலம் அ.தி.மு.க எனும் மாபெரும் இயக்கத்தை முடக்கி விடலாம் என தி.மு.க நினைப்பது ஒரு போதும் நடக்காது.

பொதுக்குழு கூட்டம் 11-ம்தேதி நடைபெற உள்ள நிலையில் அ.தி.மு.க.வை தவிர மற்ற கட்சிகள் மறைந்து விட்டது. அ.தி.மு.க மட்டுமே பேசும் பொருளாக உள்ளது. பொதுக்கூட்டத்தில் சிறுமைப்படுத்தவே ஆளுங்கட்சி இது போன்ற செயலில் ஈடுபடுகிறது. மிரட்டலுக்கு வேறு யாரையாவது பார்த்துக்கொள்ளுங்கள் என சொல்லிக்கொள்கிறேன்.

ஒற்றை தலைமை வந்தால் பல்வேறு கட்சிகள் ஆட்டம் காணும். அதன் காரணமாகவே இதுபோன்ற நடவடிக்கைகளை ஆளுங்கட்சி செய்கிறது. என்னுடைய வீட்டில் நடைபெற்ற சோதனையில் எதுவும் கைப்பற்றப்படவில்லை என்பதை தெரிவித்துக்கொள்கிறேன்.

அதையே அதிகாரிகள் தங்கள் கைப்பட எழுதி கொடுத்து விட்டு சென்றுள்ளனர். காலையிலிருந்து இங்கு வந்து எனக்கு ஆதரவு தந்துள்ள அனைத்து தொண்டர்களுக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

இதுகுறித்து எதுவும் செய்து விட முடியாது என அறிக்கை அளித்த எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமிக்கும், முன்னாள் அமைச்சர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

காலமெல்லாம் உங்களுக்கு எப்போதும் விசுவாசமாக உழைப்பேன். செலவுக்காக வைத்திருந்த 60 ஆயிரம் ரூபாய் பணத்தை மட்டுமே அதிகாரிகள் சோதனை செய்து அதை மீண்டும் திருப்பி அளித்தி விட்டு சென்று விட்டனர்.

பொதுக்குழு திட்டமிட்டபடி நடக்கும். அதற்கு நீதிமன்றம் உத்தரவு வழங்கும் என எதிர்பார்க்கிறேன். முறைகேடு செய்ததாக கூறும் பணத்தை விட அதிகமாக கடன் உள்ளது அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.காமராஜ் கூறினார்.