தற்போதைய செய்திகள்

மதுரையில் தொற்று நோய் பரவும் அபாயம்-மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ நேரில் மனு

மதுரை

மதுரை மாநகராட்சியில் வினியோகம் செய்யும் குடிநீரில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால் குடிநீர் மூலம் நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மையான குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம், முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ மனு கொடுத்துள்ளார்

அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-

மதுரை மாநகரில் 4 சட்டமன்ற தொகுதி உட்பட்ட வார்டுகளில் கடந்த ஆறு மாத காலமாக குடிநீர் விநியோகம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தண்ணீர் விநியோகம் இல்லாத பகுதிகளில் லாரிகள் மற்றும் டிராக்டர் மூலம் தண்ணீர் சரியாக வினியோகம் செய்யப்படவில்லை.

பெரியார் மற்றும் வைகை அணைகளில் போதுமான அளவிற்கு மழை நீர் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. விவசாயத்திற்கும் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. குடிநீருக்கு போதுமான நீர் இருப்பு உள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் குடிநீர் விநியோகம் முறையாக விநியோகம் செய்யாமல் சில வார்டுகளில் நான்கு நாளுக்கு ஒருமுறையும், சில வாரங்களில் ஒரு நாள் விட்டு ஒரு நாளும் விநியோகம் செய்யப்படுகிறது.

இதை முறைப்படுத்தி அனைத்து வார்டுகளிலும் ஒரு நாள் விட்டு சீராக விநியோகம் செய்ய வேண்டும். வினியோகம் செய்யும் குடிநீரில் பல்வேறு பகுதிகளில் கழிவுநீர் கலந்து வருகிறது. தற்போது தொற்றுநோய் பரவும் நிலை உள்ளதால் குடிநீர் மூலம் நோய் பரவும் என்ற அச்சத்தில் மக்கள் உள்ளனர். இதை தடுத்து நிறுத்தி போர்க்கால அடிப்படையில் தூய்மையான குடிநீர் வழங்க வழிவகை செய்ய வேண்டும்.

அம்ருத் திட்டத்தின் கீழ் முல்லைப்பெரியார் பகுதியிலிருந்து மதுரை மாநகருக்கு குடிநீர் கொண்டு வரும் திட்டப்பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பணிகள் தொடர மாநகராட்சி ஆணையர் கவனத்திற்கு எடுத்துக்கொண்டும், தமிழ்நாடு சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதித்தபோது நகர்ப்புற அமைச்சர் 2023க்குள் இத்திட்டம் நிறைவேற்றி கொடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

ஆனாலும் இந்த பணிகள் மெதுவாக நடைபெற்று வருகிறது. எனவே பணிகளை துரிதப்படுத்தி 2023க்குள் முடித்து தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இத்திட்டம் நிறைவேறினால் சுகாதார குடிநீர் கிடைக்க வாய்ப்பு உள்ளது.

அனைத்து பகுதிகளுக்கும் தங்கு தடையின்று குடிநீர் கிடைக்கும் கூடுதலாக ஒரு லட்சத்து 10 ஆயிரம் குடிநீர் இணைப்புகள் கிடைக்க வாய்ப்பு உள்ளது. எனவே தனிகவனம் செலுத்தி இத்திட்டத்தினை விரைந்து முடிக்க கேட்டுக்கொள்கிறேன்.

மதுரை மாநகராட்சியில் உள்ள முக்கிய சாலைகளில் குண்டும் மூலமாக உள்ளது. இதனால் விபத்து ஏற்படுகிறது. மக்கள் மிகுந்த சிரமப்படுகிறார்கள்.

மதுரை மாநகரம் தூசி மாநகரமாக உள்ளது. ஆகையால் மதுரை மாநகராட்சி நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் புதிய சாலைகளை அமைக்க தேவையான நிதியினை தமிழக அரசிடம் பெற்றுக்கொண்டு பணிகளை நிறைவேற்ற வேண்டும்.

மாநகராட்சிக்கு உட்பட்ட பல வார்டுகளில் பம்பிங் ஸ்டேஷன் செயல்படாமல், பாதாள சாக்கடை குழாயில் அடைப்பு ஏற்பட்டு கழிவு நீர் தெருக்களிலும் வீடுகளிலும் தேங்கி நிற்கிறது. இதனால் சுகாதாரக்கேடு ஏற்படுகிறது. பம்பிங் ஸ்டேஷனை சரியான முறையில் இயக்கி கழிவு தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மாநகராட்சியில் சுகாதாரம், குடிநீர், பாதாள சாக்கடை தொடர்பான பணிகளுக்கு பணியாளர் பற்றாக்குறை உள்ளது. இதனால் வார்டுகளில் அடிப்படை பணிகள் நடைபெறவில்லை. எனவே இந்த பணிகளை நிறைவேற்ற வார்டுகளுக்கு தேவையான பணியாளர்கள் கூடுதலாக நியமிக்க வேண்டும்.

மாநகராட்சியில் உள்ள பல வார்டுகளில் தெருவிளக்கு சரியாக ஏதுமில்லை. குறிப்பாக நான்கு மாசி வீதிகளில் எரியவில்லை. பல வார்டுகள் இருட்டாகவே உள்ளது. மாநகராட்சியில் புகார் தெரிவித்தும் உரிய காலத்தில் நடவடிக்கை எடுப்பதில்லை. எனவே தெரு விளக்குகளை முறையாக பராமரிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

வடகிழக்கு பருவமழை முன்பாக மாநகராட்சிக்கு உட்பட்ட வாய்க்காலில் தூர் வரவேண்டும். மேலும் கொசு தொல்லை போக்கும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மாநகராட்சி பகுதியில் நடைபெறும் ஸ்மார்ட் திட்ட பணிகளை துரிதப்படுத்தி விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு கொண்டு வர வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் அஇஅதிமுக கழகம் 15 மாமன்ற உறுப்பினர்களை கொண்டு பிரதான எதிர்க்கட்சியாக செயல்பட்டு வருகிறது. மாமன்ற உறுப்பினருக்கு இருக்கை ஒதுக்கீட்டில் மூன்று மாதங்களுக்குள் ஒதுக்கீடு செய்து தருகிறோம் என்று கூறினார்கள். எனவே வருகின்ற மாமன்ற கூட்ட தொடர்பில் முன் வரிசையில் ஒரு பகுதியாக மரபு படி இருக்கை ஒதுக்கீடு செய்தும், கழக மாமன்ற உறுப்பினருக்கு அலுவலக அறை ஒதுக்கீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.