தற்போதைய செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் ரூ.225 கோடியில் நவீன நெல் சேமிப்பு கொள்கலன்கள் – சட்டப்பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை

டெல்டா மாவட்டங்களில் ரூ.225 கோடி மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.

சட்டப்பேரவையில் நேற்று முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்புகள் வருமாறு:-

1. நெல் உலர்களன் வசதியுடனும், நவீன நெல் சேமிப்பு கொள்கலனுடனும் கூடிய நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் தமிழ்நாடு முழுவதும் 50 இடங்களில், 70 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

2. 30 வருடங்களுக்கு மேலான, எதிர்காலத்தில் பயன்படுத்த இயலாத அளவிற்கு சேதமடைந்த கிடங்குகளை முற்றிலுமாக அகற்றி, சென்னை IIT- யின் ஆலோசனை மற்றும் தொழில்நுட்பத்துடன், ஒரு லட்சம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட புதிய நவீன சேமிப்புக் கிடங்குகள் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும்.

3. வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மற்றும் கடலூர் மாவட்டங்களில் வேளாண் பெருமக்களிடம் இருந்து கொள்முதல் செய்யப்படும் நெல்லினை பதப்படுத்தி சேமித்து வைத்திடும் வகையில், 75 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட நவீன விஞ்ஞான தொழில் நுட்பத்துடன் கூடிய நெல் சேமிப்பு கொள்கலன்கள் 225 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

4. தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கு வளாகங்களில் அமைந்துள்ள சேதமடைந்த சாலைகள் மற்றும் இணைப்புச் சாலைகள், 120 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய சிமெண்ட் கான்கிரீட் சாலைகளாக அமைக்கப்படும். இதன் மூலம் இவ்வளாகத்திற்கு வந்து செல்லும் கனரக வாகனங்களினால் பழுது ஏற்படாமல், கான்கிரீட் சாலைகள் நீண்ட காலத்திற்கு பயன்படும் வகையில் மேம்படுத்தப்படும் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அறிவித்தார்.