சிறப்பு செய்திகள்

எடப்பாடியார் தலைமையில் கழகம் வெல்வது நிச்சயம் -எதிர்க்கட்சி துணைக்கொறடா சு.ரவி எம்.எல்.ஏ. கடும் தாக்கு

ராணிப்பேட்டை,

இதுகுறித்து எதிர்க்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களுக்கு ஸ்டாலின் ஸ்டிக்கர் ஒட்டும் படலம் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் தொடர்ந்து கொண்டிருக்கின்றது. வெயிலுக்கு பேர் போன வேலூர் மாவட்டம் மிகப்பெரிய மாவட்டமாக இருந்ததை, தி.மு.க.வில் மண்ணின் மைந்தர்கள் என மார்தட்டிக்கொள்ளும் துரைமுருகனும், காந்தியும் கண்டுகொள்ளவில்லை.

இந்த மாவட்டத்தில் அவர்கள் தனிக்காட்டு ராஜாவாகவும், மற்றவர்கள் எல்லாம் கூஜாவாக, இருக்க வேண்டும் என்று நினைத்தார்களே தவிர, இந்த பெரிய மாவட்ட மக்களின் வளர்ச்சியை துளி கூட எண்ணிப்பார்க்கவில்லை.

எங்கோ பிறந்த அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, பின்தங்கியுள்ள வேலூர் மாவட்ட மக்களுக்கு வருவாய் துறையின் சேவைகள், அரசின் நலத்திட்டங்கள் விரைவாக சேர்ந்திட வேலூர் மாவட்டத்தை மூன்றாக பிரித்து ராணிப்பேட்டை புதிய மாவட்டமாக உருவாக்கி, 4 தொகுதிக்கு ஒரு கலெக்டரை நியமித்தவர் எடப்பாடியார்.

உடனடியாக புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு கட்டிடம் கட்ட 118 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, அடிக்கல் நாட்டியவரும் எடப்பாடியார் தான். அதோடு அரக்கோணம் நகரில் கோட்டாட்சியர் அலுவலகம் புதியதாக திறந்து 2.50 கோடியில் கட்டிடம் கட்டி திறக்கப்பட்டது. புதியதாக சோளிங்கர், கலவை ஆகிய இரு புதிய தாலுக்கா உருவாக்கப்பட்டது.

அதற்கு ரூ. 2.75 கோடியில் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. ஆற்காடு தாலுக்கா அலுவலகத்திற்கு ரூ.2.75 கோடியில் புதிய கட்டிடம், வாலாஜா தாலுக்கா அலுவலகத்திற்கு ரூ. 2.75 கோடியில் புதிய கட்டிடம், அரக்கோணம் வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு ரூ. 2.75 கோடியில் புதிய கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. மேலும் அரிகலபாடி கல்லாற்றில் 5.50 கோடியில் தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

மொத்தம் 24 திட்ட பணிகள் அண்ணா தி.மு.க. ஆட்சியில் கொண்டு வரப்பட்டதாகும். இவ்வளவு சாதனைகளை நொடிப்பொழுதில் நிறைவேற்றி, ராணிப்பேட்டை மாவட்ட மக்களுக்கு சாதனை புரிந்தவர் எடப்பாடியார்.
இதையெல்லாம் மு.க.ஸ்டாலின் அறிந்திருப்பாரா? என தெரியவில்லை.

ஸ்டாலினை கொண்டு வந்து திறந்தால், ஸ்டாலின் கொண்டு வந்ததுபோல் ஆகிவிடும் என மனப்பால் குடிக்கும் அமைச்சர்கள் துரைமுருகனுக்கும், காந்திக்கும் சொல்கிறேன், கழக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நீங்கள் ஒரு ஸ்டாலினை வைத்து அல்ல, ஓராயிரம் ஸ்டாலினை வைத்து திறந்தாலும், ராணிப்பேட்டை மாவட்ட மக்களிடத்தில் எடப்பாடியாரின் இந்த மாபெரும் சாதனைகளை எள்ளளவும் மறைக்க முடியாது.

ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியும், எதுவும் செய்யாமல் திராவிட மாடல், சமூக நீதி, என மக்களை திசை திருப்பும் ஸ்டாலின் கழக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட திட்டங்களை, தான் கொண்டு வந்தது போல் திறப்பு விழா நடத்தி வருகிறார்.

ஆயிரம் கைகள் மறைத்து நின்றாலும், ஆதவன் மறைவதில்லை. ஆணையிட்டே யார் தடுத்தாலும் அலைகடல் ஓய்வதில்லை என புரட்சித்தலைவர் பாடிய வைர வரிகளை நினைவுபடுத்த விரும்புகிறேன்.

உங்களுடைய நாடகங்கள், பொய் பிரச்சாரங்கள் இனிமேல் மக்களிடத்தில் எடுபடாது. நீங்கள் மக்கள் சாபத்திற்கு ஆளாகி உள்ளீர்கள். வரும் நாடாளுமன்ற தேர்தலில் நீங்கள் மண்ணை கவ்வப்போவது நிச்சயம். எடப்பாடியார் தலைமையில் அ.தி.மு.க வெல்வது நிச்சயம்.

இவ்வாறு எதிர்க்கட்சி துணை கொறடாவும், ராணிப்பேட்டை மாவட்ட கழக செயலாளருமான சு.ரவி எம்.எல்.ஏ தெரிவித்துள்ளார்.