ரூ.500 அபராதம் விதித்து மக்களை அச்சுறுத்துவதை கைவிட வேண்டும்

தமிழக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுரை
மதுரை
மக்களை அச்சுறுத்த 500 ரூபாய் அபராதம் விதிக்காமல் எடப்பாடியார் ஆட்சியில் நடந்தது போல் மக்கள் கூடும் இடங்களில் இலவசமாக முகக்கவசங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று தமிழக அரசுக்கு, முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அறிவுறுத்தி உள்ளார்.
இதுகுறித்து முன்னாள் அமைச்சரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான ஆர்.பி.உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தற்போது கொரோனா தொற்று பரவி வருகிறது. முகக்கவசம் அணியாதவர்களுக்கு 500 ரூபாய் அபராதம் விதிக்கிறோம் என்று தமிழக அரசு ெசால்கிறது. அவ்வாறு சொல்வதை காட்டிலும் மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். ஏற்கனவே மன உளைச்சலில் இருக்கின்ற மக்களுக்கு அபராதம் விதித்து மேலும் மன உளைச்சலை உருவாக்கக்கூடாது. 500 ரூபாய் என்பது அதிகமாய் இருக்கிறது என்று மக்கள் கவலையில் இருக்கிறார்கள்.
போர்க்கால அடிப்படையில் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த அபராதம் மக்களுக்கு கவலை அளிப்பதாக இருப்பதை தவிர விழிப்புணர்வு அளிப்பதாக இல்லை. அரசு இதை கவனத்தில் கொள்ள வேண்டும். அந்த அபராத தொகையை அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஏனென்றால் 500 ரூபாய் அபராதம் என்பது சாமானிய மக்களுக்கு மிகுந்த சிரமமாக உள்ளது. பொதுமக்களுக்கு இலவசமாக முகக்கவசம் வழங்க அரசு முன் வர வேண்டும்
இதற்கு முன்பு அம்மா அரசை தலைமை தாங்கி நடத்தி வந்த எடப்பாடியார் இந்தியாவிற்கு வழிகாட்டும் வகையில் மக்களுக்கு முகக்கவசங்களை இலவசமாக வழங்கினார். அதனை தொடர்ந்து முதன் முதலில் தடுப்பு மருந்து இலவசம் என்று அறிவித்தார்.
ஆகவே தமிழக அரசு பொதுமக்கள் கூடும் இடங்களான சந்தை, பேருந்து நிலையம், ரயில் நிலையம், கோவில்களில் இலவசமாக முகக்கவசத்தை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்று அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறி உள்ளார்.