சென்னை

பெண்கள் முன்னேற்றத்துக்கு தமிழகத்தில் அதிக திட்டங்கள் – கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார் பெருமிதம்

சென்னை

ஆர்.கே.நகரில் மாவட்ட செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், தலைமையில் நடைபெற்ற புதிய மகளிர் சுய உதவிக்குழு ஒருங்கிணைப்பு கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட கழக மாணவரணி மாநில செயலாளர் எஸ்.ஆர். விஜயகுமார், இந்தியாவில் மகளிருக்கான அதிக திட்டங்கள் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது என்று தெரிவித்தார்.

வடசென்னை வடக்கு கிழக்கு மாவட்ட கழகம் சார்பில் தண்டையார்பேட்டை 38-வது வட்டத்திற்குட்பட்ட சாஸ்திரி நகர், துர்காதேவி நகர், கருணாநிதி நகர், நேரு நகர், பரமேஸ்வரி நகர், வினோபா நகர், பட்டேல் நகர், அன்னை சத்யா நகர், ராஜசேகரன் நகர், ராஜீவ்காந்தி நகர், தமிழன் நகர் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த புதிய மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த 1000 பேருக்கு புடவை, தலா 5 கிலோ அரிசி உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை கழக மாணவரணி மாநில செயலாளரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான எஸ்.ஆர்.விஜயகுமார், மாவட்ட கழக செயலாளரும், தமிழ்நாடு நுகர்வோர் கூட்டுறவு இணையத்தின் தலைவருமான ஆர்.எஸ்.ராஜேஷ் ஆகியோர் வழங்கினர்.

இந்நிகழ்ச்சியில் பேசிய கழக மாணவரணி செயலாளர் எஸ்.ஆர்.விஜயகுமார், பெண்கள் வாழ்கையில் தனி ஆளாக நின்று முன்னேற்ற பாதைக்கு செல்ல வேண்டும் என கருத்தில் கொண்டு பெண்களுக்கென தனி காவல் நிலையம், தாலிக்கு தங்கம், படித்த பெண்களுக்கு ரூ.50 ஆயிரம் நிதியுதவி, 8 கிராம் தங்கம், கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து, குழந்தைகளுக்கான பரிசு பெட்டகம், ஆண்டுதோறும் பெண்களை கவுரவிக்க கல்பனா சாவ்லா விருது, தீர வீர செயல்களில் ஈடுபடும் பெண்களுக்கு ரூ.1 லட்சம் பரிசு தொகை, இவைகள் அனைத்தும் பெண்களுக்காகவே உருவாக்கி செயல்படுத்தியவர் அம்மா அவர்கள் தான். அதனால் தான் இன்றளவும் அவரை தெய்வமாக மக்கள் கருதுகின்றனர். அவரது வழியில் இன்று பெண்கள் முன்னேற்றத்திற்கு மட்டும் அல்ல மக்களின் தேவைகளை அறிந்து முதலமைச்சர் எடப்பாடியார் திறமையாக செயல்படுகிறார்.

இந்தியாவிலேயே மகளிருக்கான அதிக திட்டங்கள் தமிழகத்தில் தான் செயல்படுத்தப்படுகிறது. மகளிர் சுய உதவிக் குழுக்களை சேர்ந்த பெண்கள் வரும் தேர்தலில் கழக வேட்பாளர்களை சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்ந்தெடுங்கள். அடிப்படை தேவைகள் 100 சதவீதம் நிறைவேற்றப்படுவதற்கு இரட்டைஇலை சின்ன வேட்பாளர்களையே ஆதரிக்க வேண்டும் என்றார்.

முன்னதாக பேசிய மாவட்ட கழக செயலாளர் ஆர்.எஸ்.ராஜேஷ், முதலமைச்சரின் ஆணையை ஏற்று ஆர்.கே.நகர் பகுதியில் மகளிர் சுய உதவி புதிய குழுக்களை அடையாளப்படுத்தும் விதமாக அவர்களை ஊக்கப்படுத்த நாள்தோறும் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் புதிய சுய உதவிக்குழுக்களை ஊக்குவிக்க அவர்களது குடும்பத்தினருக்கு இப்பகுதியில் தையல் பயிற்சி மையம், கணினி பயிற்சி மையம் உள்ளிட்டவைகள் உருவாக்கப்படும். அவர்களின் சுற்று வட்ட பகுதியில் அடிப்படை பிரச்சினைகளை நிறைவேற்ற வாட்ஸ்அப் குழுவை உருவாக்கி அதன் மூலம் நேரடியாக தீர்வு காணப்படும் என தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட பொருளாளர் ஏ.கணேசன், ஆர்.கே.நகர் மேற்கு பகுதி கழக செயலாளர் ஆர்.நித்தியானந்தம், மற்றும் வட்ட செயலாளர்கள், பகுதி கழகத்தினர், மாவட்ட பிரதிநிதிகள், பிற அணி நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.