தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளி வாலிபர் புதிதாக வீடு கட்ட ஆணை – வீடுதேடிசென்று அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வங்கினார்

திருவண்ணாமலை

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி ஊராட்சி ஒன்றியம், சேவூர் கிராமத்தில் வசித்து வரும் இரண்டு கால்கள் செயலிழந்த மாற்றுத்திறனாளி அய்யப்பன் என்பவருக்கு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலமாக முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் ரூ.2.10 லட்சம் மதிப்பீட்டில் புதிய வீடு கட்டுவதற்கான ஆணை நேற்று அய்யப்பன் தற்போது வசித்து வரும் வீட்டிற்கு நேரில் சென்று இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் எஸ்.இராமச்சந்திரன் வழங்கினார்.

ஆரணி ஊராட்சி ஒன்றியம், சேவூர் கிராமத்தில் வசித்து வருகிறார் அய்யப்பன் (வயது 46), திருமணமாகதவர். இவரது பெற்றோர் உயிருடன் இல்லை, தற்போது அய்யப்பன் அவரது அண்ணன் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். அய்யப்பன் இரண்டு கால்களும் செயலிழந்து நடக்க முடியாதவர். இவர்களது பூர்வீகம் சேவூர் கிராமம். அய்யப்பன் கடந்த 10 ஆண்டுகளாக தனது அண்ணன் வீட்டு முன்பு Xerox, Typing, Printout கடை சொந்தமாக நடத்தி வருகிறார். இதன் மூலம் மாதம் ரூ.12000 முதல் 15,000 வரை வருவாய் ஈட்டி தனக்கும், தனது அண்ணன் குடும்பத்தினருக்கு உதவியாக இருந்து வருகிறார்.

இந்த நிலையில் இவரது வீட்டின் முன்பு உள்ள அய்யப்பன் இடத்தில் சொந்தமாக வீடு கட்டுவதற்கு ஆசை பட்டுள்ளார். ஆனால் வீடு கட்டுவதற்கான நிதி தன்னிடம் இல்லாத காரணத்தால் என்ன செய்வது என்று தெரியாமல் இருந்துள்ளார். அப்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சரிடம் வீடு கட்டுவதற்கு உதவி செய்யுமாறு கோரிக்கை மனு அளித்துள்ளார். அமைச்சர் உடனடியாக அய்யப்பனின் கோரிக்கை மனு மீது நடவடிக்கை மேற்கொண்டு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை மூலம் முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ் புதிய வீடு கட்டுவற்தகான ஆணை நேற்று அய்யப்பன் வசிக்கும் வீட்டிற்கு நேரில் சென்று வழங்கினார்.

இது குறித்து அய்யப்பன் தெரிவிக்கையில் ‘பிறந்தது முதல் இரண்டு கால்களும் செயலிழந்த காரணத்தால் அடுத்தவர் உதவியுடன் எனது வாழ்க்கையை நடத்தி வருகிறேன். பெற்றோர் இறந்த பின்னர் எனது அண்ணன்கள் என்னை பார்த்துக் கொண்டு வருகிறார்கள். அவர்களுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்பதற்காக வீட்டின் முன்பு Xerox கடை நடத்தி அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் எனக்கும், எங்கள் குடும்பத்தினற்கும் உதவியாக இருந்து வருகிறேன். சேவூர் கிராமத்தில் நாங்கள் வசித்து வரும் வீட்டின் முன்பு எனக்கான இடத்தில் வீடு கட்டுவதற்கு ஆசை பட்டு, நிதி உதவி செய்யமாறு அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்தேன்.

அமைச்சர் நேற்று நான் வசிக்கும் வீட்டிற்கு நேரில் வந்து முதலமைச்சரின் பசுமை வீடுகள் திட்டத்திற்கான ஆணை வழங்குவார் என்று கனவிலும் நினைத்து பார்க்கவில்லை. இந்த ஏழை மாற்றுத்திறனாளியின் கோரிக்கை ஏற்று பசுமை வீடு கட்டுவதற்கான ஆணை வழங்கிய புரட்சித்தலைவி அம்மாவின் அரசுக்கும், எங்கள் மண்ணின் மைந்தர் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்’ என்றார்.