தற்போதைய செய்திகள்

தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி கிடையாது – கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி பேச்சு

செங்கல்பட்டு

தி.மு.க.வுக்கு வாக்கு வங்கி கிடையவே கிடையாது என்று கழக இலக்கிய அணி செயலாளர் பா.வளர்மதி கூறினார்.

செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் கிழக்கு, மேற்கு, வடக்கு ஒன்றிய கழகம் சார்பில் சிங்கபெருமாள்கோவிலில் ஒன்றிய கழகச் செயலாளர்கள் இ.சம்பத்குமார், எஸ்.கவுஸ்பாஷா, எம்.கஜா (எ) கஜேந்தின் ஆகியோர் ஏற்பாட்டில் கழக செயல்வீரர்கள், வீராங்கனைகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்டக் கழகச் செயலாளர் சிட்லபாக்கம் ச.இராசேந்திரன் முன்னிலை வகித்தார். இக்கூட்டத்தில் கழக இலக்கிய அணிச் செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி பேசியதாவது:-

கழக அரசின் நலத்திட்டங்களை இந்தியாவிலுள்ள அனைத்து மாநிலங்களும் பாராட்டுகின்றன. பொங்கல் தொகுப்புடன் ரூ.2500 வழங்கியதை பொறுத்துக்கொள்ள முடியாத ஸ்டாலின் ஏதேதோ உளறி வருகிறார். நீதிமன்றத்திற்கு செல்கிறார்கள். ஏனெனில் தி.மு.க.விற்கு பொதுமக்களின் வாக்கு வங்கி என்பது கிடையவே கிடையாது. அவர்களுக்கு இருப்பதெல்லாம் தி.மு.க.வின் வாக்குகள் மட்டுமே. கருணாநிதியின் பெயரை சொல்லிக்கூட ஸ்டாலினால் ஓட்டு கேட்க முடியவில்லை. அந்த அளவுக்கு பொதுமக்களிடம் நல்ல பெயரை வாங்கி வைத்துள்ளார்கள்.

எங்கு பார்த்தாலும் கழக அரசை பாராட்டுகிறார்கள். போற்றுகிறார்கள். மூன்றாவது முறையாக மீண்டும் கழகம் ஆட்சி அமைப்பது உறுதியாகி விட்டதை உணர்ந்ததால் ஸ்டாலின் அச்சத்தில் மூழ்கி உள்ளார். கழக அரசு கொண்டு வந்த திட்டங்களை மீண்டும் மீண்டும் நாம் எடுத்துக் கூறினால் செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தில் தி.மு.க.வினர் டெபாசிட் இழப்பது உறுதியாகி விடும். வருகின்ற சட்டமன்ற தேர்தலில் ஒன்றிணைந்து கடுமையாக உழைப்போம். செங்கல்பட்டு மேற்கு மாவட்டத்தை கழகத்தின் கோட்டையாக்க உறுதி கொள்வோம்.

இவ்வாறு கழக இலக்கிய அணி செயலாளரும், தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவருமான பா.வளர்மதி பேசினார்.

கூட்டத்தில் கழக மகளிர் அணி இணைச் செயலாளர் எஸ்.கணிதா சம்பத், பல்லாவரம் நகர கழகச் செயலாளர் ப.தன்சிங், கூடுவாஞ்சேரி பேரூர் கழகச் செயலாளர் டி.சீனிவாசன் உட்பட கழக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.