இந்தியா மற்றவை

உள்நாட்டு விமானங்களில் வைபை வசதி – மத்திய அரசு அனுமதி

புதுடெல்லி

இந்தியாவுக்குள் இயக்கப்படும் உள்நாட்டு விமானங்களில் பயணிகளுக்கு ‘வை-பை’ இணைய வசதியை வழங்க விமான நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.

விமானத்துறையில் பயணிகளுக்கு மற்றொரு புதிய வசதியை வழங்க மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதுதொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டு இருக்கிறது.

அதில், விமானத்தில் இருக்கும் பயணிகள் லேப்-டாப், ஸ்மார்ட் வாட்ஜ், இ-ரீடர் ஆகியவற்றை பயன்படுத்தும்போது அவர்களது வை-பை மூலம் இணைய சேவைகளை வழங்க விமானி அனுமதிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

உலகளவில் பல விமான நிறுவனங்கள், பயணிகளுக்கு விமானத்தில் வை-பை வசதிகளை வழங்கி வருகிறது. ஏர்-ஏசியா, ஏர்-பிரான்ஸ், பிரிட்டிஷ் ஏர்வேஸ், ஏர் – நியூசிலாந்து, மலேசியா ஏர்லைன்ஸ், எகிப்து ஏர், எமிரேட்ஸ், கத்தார் ஏர்வேஸ் உள்பட 30 விமான நிறுவனங்கள் தங்களது பயணிகளுக்கு விமானத்தில் வை-பை வசதியை வழங்கி வருகிறது.

முன்பு இந்த விமான நிறுவனங்களின் விமானங்கள் இந்திய வான் எல்லைக்குள் நுழையும்போது ‘வை-பை’ வசதியை ‘சுவிட்ச் ஆப்’ செய்துவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.