சிறப்பு செய்திகள்

சொத்து வரி உயர்வு ஸ்டாலினின் முதல் பரிசு

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி கே.பழனிசாமி விளாசல்

சேலம்

கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி நேற்று சேலம் புறநகர் மாவட்டத்தில் தலைவாசல், ஆத்தூர், வாழப்பாடி, வீரபாண்டி ஆகிய இடங்களில் கழகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள நீர் மோர் பந்தலை திறந்து வைத்து பொதுமக்களுக்கு நீர், மோர், இளநீர், தர்பூசணி, குளிர்பானம் ஆகியவற்றை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:-

கழகத்தை பொறுத்த வரைக்கும் ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் சேவை செய்வதிலே முதன்மையாக விளங்கும் இயக்கம் ஆகும். இன்றைக்கு ஆளுகின்ற பொறுப்பில் இல்லாவிட்டாலும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்வதிலே முதன்மையாக விளங்குகின்ற கட்சி என்று சொன்னால் அது கழகம் ஆகும்.

மக்களுக்கு பிரச்சினை ஏற்படுகின்ற பொழுது தோள் கொடுக்கின்ற கட்சி கழகம் ஆகும். தைப்பொங்கல் வருகின்ற பொழுது அம்மாவுடைய அரசு பொங்கல் தொகுப்பு கொடுத்தது மட்டுமல்லாமல் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் 2500 ரூபாய் வழங்கி பொங்கலை சிறப்பாக கொண்டாடுவதற்கு நடவடிக்கை எடுத்த அரசு கழக அரசு ஆகும்.

கொரோனா காலத்திலே ஏழை எளிய மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக ரேஷன் கடைகளில் உணவு பொருட்கள் தங்கு தடையில்லாமல் விலையில்லாமல் 10 மாத காலம் வழங்கிய அரசு அம்மாவுடைய அரசு.

இன்றைய தினம் பத்திரிகையிலே பார்த்திருப்பீர்கள். இன்றைக்கு நகர்ப்புறத்தில் வசிக்கின்ற மக்களுக்கு பேரூராட்சி, மாநகராட்சி, நகராட்சியில் வசிக்கின்ற மக்களுக்கு ெசாத்து வரி 150 சதவீதம் வரை உயர்த்தி உள்ளார்கள். 1000 ரூபாய் வீட்டு வரி செலுத்துபவர்கள் 2500 ரூபாய் செலுத்த வேண்டும். உள்ளாட்சி தேர்தல் முடிகின்ற வரைக்கும் காத்திருந்தார்கள்.

வாக்களித்த மக்களுக்கு முதல் பரிசு ஸ்டாலின் கொடுத்துள்ளார். இன்னும் மின்சார கட்டணம் உயர்வு உள்ளது, போக்குவரத்து கட்டணம் உயர உள்ளது, குடிநீர் கட்டணம் உயர உள்ளது. இப்படி ஆட்சிக்கு வருவதற்கு முன்பு ஒரு பேச்சு, ஆட்சிக்கு வந்த பிறகு ஒரு பேச்சு என இரட்டை வேடம் போடும் கட்சி தி.மு.க. கட்சியாகும். ஆகவே மக்கள் எண்ணி பார்க்க வேண்டும்.

கழகம் எம்.ஜி.ஆர். காலத்தில் தொடங்கி இதயதெய்வம் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி நாட்டு மக்களுக்கு நன்மையை கொடுத்தார்கள். அதே வழியில் அம்மாவுடைய அரசில் ஏராளமான திட்டங்களை நாம் செய்து கொடுத்தோம்.

தடுப்பணைகளை கட்டி கொடுத்துள்ளோம். நல்ல சாலை வசதிகளை செய்து கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு வறட்சி நிவாரணம் கொடுத்துள்ளோம். விவசாயிகளுக்கு பயிர்க்கடன் தள்ளுபடி செய்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் சேலம் மாவட்டம் தலைவாசலில் ஆசியாவிலேயே மிகப்பெரிய கால்நடை பூங்கா கெங்கவல்லி சட்டமன்ற தொகுதியில் அமைந்துள்ளது. திராவிட முன்னேற்ற கழகத்தை சேர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின் இன்றைக்கு ஆட்சி பொறுப்பு ஏற்றதில் இருந்து இன்றுவரை பத்து மாத ஆட்சிக் காலத்தில் என்றைக்கும் இல்லாத அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சீர்குலைந்து இன்றைக்கு படு பாதாளத்துக்கு போய்விட்டது. எங்கு பார்த்தாலும் கூட்டு பாலியல் பலாத்காரம், சிறுமி கற்பழிப்பு இப்படியே தொடர்கதையாக நடந்து கொண்டிருக்கிறது. இன்றைக்கு சட்டம்- ஒழுங்கு கேள்விக்குறியாகியுள்ளது.

இந்த துறையில் உள்ள முதலமைச்சர் ஸ்டாலின் அதை பற்றி கண்டுகொள்ளவே இல்லை. தினந்தோறும் பத்திரிகைகளில் வரும் செய்தியையாவது படித்து பார்த்து இனியாவது இதற்கு முடிவு கட்ட வேண்டும் என்று இந்த நேரத்தில் தெரிவித்து கொள்கிறேன்.

அதேபோல் போதைப் பொருள் எங்கு பார்த்தாலும் சர்வ சாதாரணமாக கிடைக்கிறது. ஆகவே கழக அரசை பொறுத்தவரைக்கும் கடுமையான சட்டம் இருந்தது. தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும் தயவு தாட்சண்யம் இல்லாமல் தண்டனை வழங்கி சட்டத்தின் கீழ் ஆட்சி நடைபெற்றது.

இன்றைய தினம் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் ஆட்சியில் தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு அடியோடு சீர்குலைந்து விட்டது. இன்றைக்கு எங்கே பார்த்தாலும் போதை பொருள், பாலியல் பலாத்காரம், சிறுமி கற்பழிப்பு இப்படி தொடர்கதையாக இருந்து கொண்டிருக்கிறது.

இவை மக்களுக்கு மிகுந்த வேதனையை அளித்துக் கொண்டிருக்கிறது. இந்த தி.மு.க. அரசு பொறுப்பேற்றதற்கு பிறகு தி.மு.க.வை சேர்ந்தவர்கள் எவ்வளவு அராஜகத்தில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மக்கள் தொலைக்காட்சியில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

தி.மு.க.வினர் கடைக்கு சென்றால் பொருளை வாங்கிக்கொண்டு அந்த பொருளுக்கு தேவையான விலையை கேட்டால் அவர்களை அடிக்கின்றார்கள். அதேபோல் காவல்துறையை மிரட்டுகிறார்கள். எல்லா தொலைக்காட்சிகளிலும் பார்த்திருப்பீர்கள்.

ஆக இப்படி தமிழகத்தில் மக்கள் விரோத ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அம்மாவுடைய அரசு இருக்கின்ற வரை மக்களுக்கு பல்வேறு நன்மைகளை செய்தது. ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி தொடரும். இது கழகத்தின் லட்சியம் ஆகும்.

இவ்வாறு கழக இணை ஒருங்கிணைப்பாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.