மதுரை

எய்ம்ஸ் மருத்துவமனைக்கு கழக ஆட்சியில் திறப்பு விழா மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா உறுதி

மதுரை

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நிறைவடைந்துள்ளது. இம்மருத்துவமனை வரும் கழக ஆட்சியில் நிச்சயம் திறக்கப்படும் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. உறுதிபட தெரிவித்தார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் திருப்பரங்குன்றம் தொகுதிக்குட்பட்ட ஹார்விபட்டி பகுதியில், பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாவட்ட இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. திருப்பரங்குன்றம் ஒன்றிய கழக செயலாளர் நிலையூர் முருகன், மாவட்ட கழக துணை செயலாளர் முத்துக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தார். பகுதி கழக துணை செயலாளர் செல்வகுமார், வட்ட கழக செயலாளர் மரக்கடை முருகேசன் வரவேற்றனர்.

இக்கூட்டத்தில் மாவட்ட செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசியதாவது:-

பூத் கமிட்டி நிர்வாகிகள் கழகத்தின் சாதனை திட்டங்களை வீடு வீடாக எடுத்து சொல்ல வேண்டும். முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் குடிமராமத்து திட்டத்தின் மூலம், மாநிலம் முழுவதும் பசுமை தேசமாக உருவாகி வருகிறது இந்திய அளவில் நீர் மேலாண்மையில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதனை பெற்றுத் தந்தவர் முதலமைச்சர். அவருக்கு உறுதுணையாக துணை முதலமைச்சர் இருந்து வருகிறார். கடந்த திமுக ஆட்சிக் காலத்தில் இதுபோன்று ஏதாவது ஒரு சாதனை செய்தது உண்டா என்று ஸ்டாலின் கூறவேண்டும்.

எந்தக் கூட்டத்திலும் தொடர்ந்து, ஐந்து நிமிடம் கூட குறிப்பு இல்லாமல் பேச முடியாத தலைவர் மு.க.ஸ்டாலின் விவசாயி எனக்கூறும் முதல்வரையே விமர்சிக்கிறார்.முதல்வர் வேட்பாளர் எடப்பாடி கே.பழனிசாமி தான் என்று முன்மொழிந்த பிறகு, தமிழகம் முழுவதும் கட்சியினர் மட்டுமில்லால் மக்கள் மத்தியிலுமே ஆதரவு பெருகியுள்ளது. அடுத்த முதல்வர் எடப்படியார் தான்.மேலும், எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப்பணி குறித்து ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

எய்ம்ஸ் மருத்துவமனையின் நிலம் கையகப்படுத்துதல் மற்றும் சுற்றுச்சுவர் பணிகள் அனைத்தும் முடிந்து விட்டது. நிதி ஆதாரத்திற்கான ஒப்புதல் பெற்றவுடன் மூன்றே வருடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமான பணி முடிவடையும். திமுக ஆட்சியில் இதுபோன்ற திட்டங்களை கொண்டு வந்தது உண்டா?கழக ஆட்சியில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தது போல, அடுத்த கழக ஆட்சியில் முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில் பிரதமர் மோடி திறந்து வைப்பார் .

இவ்வாறு வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. பேசினார்.

இக்கூட்டத்தில் பகுதி செயலாளர் பன்னீர்செல்வம், துணை செயலாளர் செல்வகுமார், முன்னாள் மாமன்ற உறுப்பினர் நாகலட்சுமி பாண்டுரங்கன், நிர்வாகிகள் மகாராஜன், வேல்ராஜ், கே.வி.ராஜா, கோட்டை முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.