தற்போதைய செய்திகள்

தமிழக கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை – அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி

அம்பத்தூர், ஆக.6-

கல்விமுறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கற்பதில் எந்த தடையுமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறினார்.

எண்ணூர் கத்திவாக்கத்தில் அமைந்துள்ள தனியார் திருமண மண்டபத்தில் சென்னை மாநகராட்சி மற்றும் ராயல் என்பீல்டு நிறுவனம் இணைந்து எண்ணூர் ஆல் இந்தியா ரேடியோ நகரை சேர்ந்த 500 நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்காக ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

திருவொற்றியூரில் உள்ள 1504 தெருக்களில் 517 தெருக்கள் தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளன. மேலும்m திருவொற்றியூர் பகுதியில் பிறநோய் உள்ளவர்களை தீவிரமாக கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது. சென்னையில் அதிகளவில் ஏற்படுத்தப்பட்டுள்ள காய்ச்சல் முகாம்கள் மூலமாக ஆரம்ப நிலையிலேயே கொரோனா கண்டறியபடுவதால் கொரோனா பரவலை தடுப்பது எளிதாக உள்ளது.

தமிழகத்தில் இரு மொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என அறிவித்த முதல்வரின் அறிவிப்பை அனைத்து கட்சியினரும் வரவேற்றுள்ளனர். மும்மொழி கொள்கையை ஆராய தனிக்குழு அமைத்து குழுவின் அறிக்கைக்கு பின்னர் அதுகுறித்து முடிவு எடுக்கப்படும். தமிழக கல்வி முறையில் கட்டாய திணிப்பை எதிர்க்கிறோமே தவிர கல்வி கற்பதில் எந்த தடையுமில்லை.

தமிழகத்தில் தினமும் நடத்தப்படும் கொரோனா பரிசோதனைகளில் 10 சதவிகித பாதிப்பு தான் தற்போது ஏற்பட்டுள்ளது.

இவ்வாறு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் ஐஏஎஸ் அதிகாரி வர்கிஷ், திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் மாதவரம் வி.மூர்த்தி, முன்னாள் எம்.எல்.ஏ. கே.குப்பன், பகுதி செயலாளர் கே.கிருஷ்ணன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.