தற்போதைய செய்திகள்

ஒன்றியங்கள் தோறும் வேலைவாய்ப்பு உருவாக்க நிதி ஒதுக்கீடு – அமைச்சர் எம்.சி.சம்பத் தகவல்

செங்கல்பட்டு

தொழில் துவங்க பல்வேறு அம்சங்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது. ஒன்றியங்கள் தோறும் தனியார்துறை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க 30 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது என்று அமைச்சர் எம்.சி.சம்பத் தெரிவித்துள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமினை தொழில் துறை அமைச்சர் எம்.சி.சம்பத் தொடங்கி வைத்து நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

பின்னர் அமைச்சர் எம்.சி.சம்பத் பேசியதாவது:-

2015ம் ஆண்டில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 69 ஆயிரம் கோடி திட்ட மதிப்பீடு வரப்பெற்று 71 நிறுவனங்கள் செயல்பட்டு வருகிறது. இதில் ஒரு லட்சத்து 89 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 74 சதவீதம் இலக்கு அடைந்துள்ளது. இதனைத்தொடர்ந்து 2019-ம் ஆண்டில் நடைபெற்ற உலக தொழில் முதலீட்டாளர்கள் மாநாடு 304 நிறுவனங்களில் ரூ.3 லட்சத்து 501 கோடி வரப்பெற்று இதில் 59 நிறுவனங்களில் 89 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 59 நிறுவனங்கள் 13 ஆயிரம் கோடி அளவிற்கு முதலீடு செய்துள்ளனர். 59 நிறுவனங்களை கணக்கிடும்போது 19 சதவீதம் இலக்கு அடைந்துள்ளது. செயல்பாட்டிற்கு வர உள்ள 201 நிறுவனங்களை கணக்கிட்டால் சுமார் 60 சதவீதம் இலக்கு அடையும். 2019ம் ஆண்டு சுமார் 80 சதவீதம் இலக்கு அடையும். இதில் 10 லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். உலக அளவில் தொழில் முதலீடு செய்ய உகந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

மேலும் சாலை வசதி, விமான போக்குவரத்து வசதி, துறைமுக வசதி உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது. தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு முழுமையாக பாதுகாக்கப்பட்ட ஒரு அமைதியான மாநிலமாக உள்ளது. அன்னிய நேரடி முதலீட்டில் 3-வது இடத்திலும் ஏற்றுமதியில் இரண்டாம் இடத்திலும் தமிழகம் உள்ளது. தொழில் துவங்க பல்வேறு அம்சங்கள் நிறைந்த மாநிலம் தமிழ்நாடு திகழ்கிறது. படித்து விட்டு வேலை வாய்ப்பில்லாதவர்களுக்கு ஒன்றியங்கள் தோறும் தனியார்துறை மூலம் வேலைவாய்ப்பை உருவாக்க 30 லட்சம் ரூபாய் நிதியை தமிழ்நாடு அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இவ்வாறு அமைச்சர் எம்.சி.சம்பத் பேசினார்.

இம்முகாமில் வேலைவாய்ப்பு துறை சார்பில் பணி நியமன ஆணை, திருக்கழுக்குன்றம் வட்டத்தை சேர்ந்த 10 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா, முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தில் கீழ் 2019-2020 திட்டத்தின் கீழ் வீடு கட்டுவதற்கான ஆணை 5 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டத்தின்படி ஊட்டச்சத்து வார உறுதி மொழி ஏற்கப்பட்டது. மேலும் சுகாதாரத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்துறை, ஊரக வளர்ச்சி துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சியை அமைச்சர் பார்வையிட்டார்.

இந்நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆசியர் அ.ஜான்லூயிஸ், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரும் காஞ்சிபுரம் மத்திய மாவட்ட கழக செயலாளருமான திருக்கழுக்குன்றம் எஸ்.ஆறுமுகம், காஞ்சிபுரம் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் சிட்லபாக்கம் சா.இராஜேந்திரன், காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழக செயலாளருமான வாலாஜாபாத் பா.கணேசன், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரேவதி, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.ராஜி, கழக நிர்வாகிகள் யஸ்வந்த்ராவ், மஞ்சுளா ரவிக்குமார், வி.வேலாயுதம், ஆனூர் வி.பக்தவச்சலம், ஆறுமுகம் சி.விவேகானந்தன், எஸ்.டி.பிரசாத், ஜி.ராகவன், எ.விஜயரங்கன், கோ.அப்பாதுரை, எஸ்.கவுஸ்பாஷா, தையூர் எஸ்.குமரவேல், கிருஷ்ணமூர்த்தி, டாக்டர் பிரவின்குமார், வி.ஆர்.செந்தில்குமார், எம்.ஜி.கே.கோபிகண்ணன், அரிகிருஷ்ணன், நத்தம் ஏழுமலை அரிதாஸ், தயாளன், சேகர், தினேஷ்குமார், மோகன்ராஜ், சங்கர், புல்லட் சுரேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.