தற்போதைய செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் – அமைச்சர்கள் பி.தங்கமணி, வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்

நாமக்கல்

மாற்றுத்திறனாளிகள் ஆவின் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க ரூ.50,000 நிதி உதவிக்கான ஆணையினையும், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் அமைச்சர்கள் பி.தங்கமணி, மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் வழங்கினர்.

நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் கா.மெகராஜ் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக அமைப்புச் செயலாளரும், நாமக்கல் மாவட்ட கழக செயலாளரும், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சருமான பி.தங்கமணி, கழக மகளிர் அணி இணைச் செயலாளரும், சமூக நலன் மற்றும் சத்துணவுத் திட்டத்துறை அமைச்சருமான மருத்துவர் வெ.சரோஜா ஆகியோர் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

அப்போது மாற்றுத்திறனாளிகள் ஆவின் பொருட்கள் விற்பனை மையம் அமைக்க அரசு ரூ.50,000 நிதி உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் பல்லக்காபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார் என்ற மாற்றுத்திறனாளிக்கு ஆவின் மையம் அமைக்க உத்தரவை அமைச்சர்கள் வழங்கினர்.

மேலும் முதலமைச்சரின் உத்தரவிற்கிணங்க கொரோனா நோய்த்தொற்றினை தடுக்கும் வகையில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 10 சிறப்பு பள்ளிகளில் பயிலும் மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் உடல் வெப்ப அளவை இன்ப்ராரெட் மூலம் கண்டறியும் தலா ரூ.10,000 மதிப்பிலான மதிப்பில் 10 கருவிகளை அமைச்சர்கள் வழங்கினர். இதையடுத்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம் கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு வாகனங்களை அமைச்சர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தனர்.

அதைத்தொடர்ந்து நாமக்கல் மாவட்ட ஆட்சியரக வளாகத்தில் மாற்றுத்திறனாளிகள் சிரமமின்றி வந்து செல்ல பயன்பாட்டில் இருந்து வந்த பேட்டரி கார் ரூ.95,000 மதிப்பில் பழுது நீக்கம் செய்யப்பட்டதையடுத்து மாற்றுத்திறனாளிகளின் பயன்பாட்டிற்கு அமைச்சர்கள் துவக்கி வைத்தனர். பின்னர் கொரோனா நோய்த்தொற்று தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்ட மாற்றுத்திறனாளிகளை பாராட்டி அவர்களுக்கு கேடயங்களையும், மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு சக்கர நாற்காலிகள், சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் உள்பட பல்வேறு உதவி உபகரணங்களையும் அமைச்சர்கள் வழங்கினர்.

இந்நிகழ்வில் காவல் கண்காணிப்பாளர் அர.அருளரசு, மாவட்ட வருவாய் அலுவலர் துர்காமூர்த்தி, நாமக்கல் மாவட்ட கழக அவைத்தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட ஊராட்சிக்குழு துணைத்தலைவருமான பி.ஆர்.சுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் த.பா.ஜான்சி மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.