சிறப்பு செய்திகள்

`நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தை செயல்படுத்த வேண்டும் மத்திய அமைச்சரிடம், முதலமைச்சர் வலியுறுத்தல்

சென்னை

தமிழகத்தில் நதிகள் இணைப்பு திட்டத்தை செயல்படுத்துவதன் சாத்தியக்கூறுகள் குறித்து மத்திய ஜல் சக்தித்துறை அமைச்சர் கஜேந்திர சிங் செகாவத்துடன் தலைமைச்செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி காணொலிக் காட்சி மூலம் நேற்று ஆலோசனை நடத்தினார்.

அப்போது முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, மத்திய அமைச்சரிடம் தெரிவித்ததாவது:-

தமிழகத்தின் ஜீவாதாரமாக இருக்கும் காவிரி, மாநிலத்தின் விவசாயம், குடிநீர் தேவைக்கும் ஆதாரமாக இருந்து வருகிறது. ஆகவே நமாமி கங்கை திட்டத்தை சிறப்பு திட்டமாக மத்திய அரசு ஏற்றிருப்பதை போல நடந்தாய் வாழி காவிரி திட்டத்தையும் தேசிய திட்டமாக ஏற்று செயல்படுத்த வேண்டும். இதற்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும்.

நமாமி கங்கை திட்டத்தைப் போலவே, அதே வழியில் அமல்படுத்துவதற்கு காவிரி ஆறு சீரமைப்பு மாசு கேட்டை அடியோடு நீக்கி புனர்வாழ்வு திட்டம் ஒன்றை நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன். ரூபாய் 10,700 கோடி செலவிலான இத்திட்டத்துக்கு வாப்காஸ் அமைப்பு திட்ட அறிக்கையை தயாரித்திருக்கிறது. உலக வங்கி ஆதரவில் அடல் புஜால் யோஜனா திட்டத்தை 7 மாநிலங்களில் மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது.

தமிழகம் தண்ணீர் பற்றாக்குறை மாநிலம் என்ற நிலையிலும் இத்திட்டத்தின் கீழ் தமிழகம் கொண்டு வரப்படவில்லை. ஆகவே நடப்பு ஆண்டில் இத்திட்டத்தில் தமிழ்நாடு சேர்க்கப்பட வேண்டும். கோதாவரி காவிரி ஆறு இணைப்பு, காவிரி குண்டாறு இணைப்பு திட்டங்கள் குறித்து ஏற்கனவே மத்திய அரசுக்கு தெரிவித்துள்ளேன்.ஒரு அணை எந்த மாநிலத்தில் இருக்கிறதோ, அந்த மாநிலத்திடமே அணையை நிர்வகிக்கும் முழு பொறுப்பும் ஒப்படைக்கப்பட வேண்டும். இந்நிலையில் அணை பாதுகாப்பு மசோதாவில் திருத்தம் கொண்டு வரப்பட வேண்டும்.

பெண்ணையாற்றின் குறுக்கே அணை கட்டவும் அனுமதி அளிக்கக்கூடாது. இதுபோல காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணையை கட்டுவதற்கு அனுமதி அளிக்கக்கூடாது. கோதாவரி-காவிரி ஆறு இணைப்பு திட்டத்திலிருந்து தமிழ்நாட்டுக்கு 200 டி.எம்.சி. தண்ணீர் தரப்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளேன் என்பதை தங்களுக்கு நினைவுப்படுத்துகிறேன்.

ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் மே மாதத்தில் கிராமப்புறங்களில் எத்தனை எத்தனை குடியிருப்புகள் என்ற விவரம் திரட்டப்பட்டு அது பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. நடப்பு ஆண்டில் 34 லட்சம் குடியிருப்புகளுக்கு குழாய் இணைப்பு கொடுப்பதென உத்தேசிக்கப்பட்டுள்ளது. 2021ம் ஆண்டுக்கு ரூ.2375 கோடி ஒதுக்கீட்டில் மாவட்டங்களுக்கு ரூ.2265 கோடியை ஒதுக்கீடு செய்திருக்கிறோம். எஞ்சியிருக்கும் 14 லட்சம் குடியிருப்புகளுக்கு பல்வேறு திட்டங்களின் நிதியைக் கொண்டு இணைப்பு கொடுத்து விடுவோம். ஏற்கனவே 4 லட்சம் இணைப்புகள் கொடுத்தாகி விட்டது. அடுத்த ஆண்டு (2021) மார்ச் மாதத்துக்குள் எஞ்சிய இணைப்புகள் கொடுக்கப்பட்டு விடும்.

பெண்ணையாறு குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டி வருகிறது. இது தற்போது அமலில் இருக்கும் ஒப்பந்தங்களுக்கு எதிரானது. விரோதமானது. இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு ஒரு வழக்கு தொடர்ந்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுப்படி, மத்திய நீர் ஆணையம் மூலம் சமரசக்குழுக்கள் கூடி விவாதித்தது. இருந்தும் இந்தக் கூட்டங்களில் எந்த ஒரு முன்னேற்றமும் காணப்படவில்லை. இந்நிலையில் ஒரு ட்ரிப்யூனலை ஏற்படுத்த மத்திய அரசை கேட்டுக் கொண்டுள்ளோம். இது தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுத்தால் பாராட்டுக்குரியது.

இவ்வாறு மத்திய அமைச்சரிடம் முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி எடுத்துரைத்தார்.

இந்த கூட்டத்தில் நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, தலைமைச் செயலாளர் க.சண்முகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ஹர்மந்தர் சிங், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் மேலாண்மை இயக்குநர் சி.என்.மகேஸ்வரன், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை இயக்குநர் கே.எஸ்.பழனிசாமி, காவேரி தொழில் நுட்பக்குழுமத்தலைவர் ஆர்.சுப்பிரமணியன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.