தற்போதைய செய்திகள்

இனி வரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதி-முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ பேட்டி

மதுரை

எங்களுக்கு ஒரே எதிரி தி.மு.க. தான் என்றும் இனிவரும் தேர்தலில் கழகம் வெற்றிபெறுவது உறுதியாகி விட்டது என்றும் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ கூறி உள்ளார்.

நாட்டின் 75 வது சுதந்திர தினத்தை முன்னிட்டு வீடுகளில் தேசிய கொடிகளை ஏற்றுவது தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட கழக அலுவலகத்தில் கழக அமைப்பு செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதன்பின்னர் பின்னர் கழக அமைப்பு செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பிரதமரின் வேண்டுகோளை ஏற்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடியார் ஆணைக்கிணங்க, 75-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட கழக அலுவலகத்தில் ஆகஸ்ட் 13 முதல் 15-ந்தேதி வரை தேசிய கொடி பறக்க விடப்படும்.

மதுரைக்கு காந்தியடிகள் வந்த பின் தான் மகாத்மா காந்தி என அழைக்கப்பட்டார். ரஜினிகாந்த் ஏற்கனவே அரசியலுக்கு வர மாட்டேன் என சொல்லி விட்டார். ரஜினிகாந்த் ஒரு வாசகம் என்றாலும் திருவாசகமாக பேசுவார்.

தி.மு.க அரசு மீது மக்கள் கொதிப்பு அடைந்து உள்ளனர். திமுகவினர் நாடாளுமன்ற தேர்தலில் என்ன சொல்லி வாக்கு கேட்க போகிறது என தெரியவில்லை. தி.மு.க அறிவித்த திட்டங்களை செயல்படுத்தவில்லை.

முதியோர் உதவித்தொகை தங்கு தடையின்றி கிடைக்க முதல்வர் செயல்பட வேண்டும். டி.டி.வி தினகரன் பேச்சை நாங்கள் பெரிசாக எடுத்து கொள்ள போவதில்லை. சசிகலா பேச்சுக்கு நாங்கள் எந்த பதிலும் சொல்லப்போவதில்லை.
அதிமுகவினர் கடிவாளம் கட்டிய குதிரை போல ஒரே நோக்கமாக எடப்பாடி கே.பழனிசாமியை முதலமைச்சராக்குவதற்கு செயல்பட்டு வருகிறோம்,

அ.தி.மு.க.வுக்கு ஒரே எதிரி தி.மு.க. மட்டுமே. மற்றவர்களை நாங்கள் பொருட்படுத்துவதில்லை. இனி வருகின்ற தேர்தலில் அ.தி.மு.க.வின் வெற்றி உறுதி செய்யப்பட்டு விட்டது. ஒரு சிலர் அ.தி.மு.க.வில் இருந்து செல்வதால் அ.தி.மு.க.வுக்கு எந்தவொரு பாதிப்பும் இல்லை.

மதுரையில் நடைபெற்று வரும் ஸ்மார்ட் சிட்டி பணிகளில் ஊழல் நடந்துள்ளதாக நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டை முன் வைக்கிறார். நிதியமைச்சர் பி.டி.ஆர் சொல்லும் குற்றச்சாட்டை நிரூபிக்க வேண்டும்.

கமிஷனுக்காக நிதியமைச்சர் பி.டி.ஆர் எங்கள் மீது குற்றச்சாட்டை சொல்கிறாரா என தெரியவில்லை. நிதியமைச்சர் பி.டி.ஆர் கமிஷன் கேட்கிறார் என தி.மு.க.வினர் சொல்கிறார்கள்.

இவ்வாறு கழக அமைப்பு செயலாளரும், மதுரை மாநகர் மாவட்ட கழக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செல்லூர் கே.ராஜூ கூறினார்.

இந்நிகழ்வின் போது மாவட்ட கழக அவைத்தலைவர் அண்ணாதுரை, மாவட்ட கழக துணை செயலாளர் ராஜா, அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணைச்செயலாளர் எம்.எஸ்.பாண்டியன், கழக இலக்கிய அணி இணை செயலாளர் வில்லாபுரம் ரமேஷ், மாவட்ட கழக பொருளாளர் குமார் உட்பட பலர் உடனிருந்தனர்.