சிறப்பு செய்திகள்

மேகதாதுவில் அணை கட்ட அனுமதி அளிக்கக்கூடாது-பிரதமரை சந்தித்து கழக ஒருங்கிணைப்பாளர்கள் வலியுறுத்தல்

புதுடெல்லி,

புதுடெல்லி சென்றுள்ள தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி, எதிர்க்கட்சி துணைத்தலைவரும், கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேற்று பிரதமர் நரேந்திர மோடியை நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அவரது அறையில் சந்தித்து பேசினர்.

அப்போது இருவரும் காவேரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட அனுமதி தரக்கூடாது என்றும், காவேரி- கோதாவரி நதிநீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.

இதன் பின்னர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட பிரதமரை நேரில் சந்தித்து நானும், கழக ஒருங்கிணைப்பாளரும் நன்றி தெரிவித்தோம். தமிழகத்தில் கொரோனா
வைரஸ் பரவலை கட்டுப்படுத்தவும், அதற்கு தேவையான தடுப்பூசியை தேவையான அளவுக்கு வழங்குமாறு பிரதமரிடம்
வலியுறுத்தியுள்ளோம்.

மேகதாது அணை பிரச்சினையை பொறுத்தவரை புரட்சித்தலைவி அம்மா முதலமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னர் கழக ஒருங்கிணைப்பாளர் முதலமைச்சராக இருந்தபோதும், அதன் பின்னர் நான் முதலமைச்சராக இருந்தபோதும் மேகதாதுவில் அணை கட்டக்கூடாது, அதற்கு மத்திய அரசு உதவக்கூடாது என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளோம்.

அதையே இப்போது தொடர்ந்து வலியுறுத்தியுள்ளோம். மேகதாதுவில் அணை கட்டப்பட்டால் டெல்டா மாவட்டம் பாலைவனமாகிவிடும். தமிழகத்தில் சுமார் 16 மாவட்டங்கள் காவேரி நீரை குடிநீர் ஆதாரமாக கொண்டுள்ளது. ஆகவே பிரதமர் இதில் கவனம் செலுத்தி மேகதாதுவில் அணை கட்ட எந்தவிதத்திலும் உதவக்கூடாது என்று கோரிக்கை வைத்திருக்கிறோம்.

நீர் பற்றாக்குறை மாநிலமாக தமிழ்நாடு விளங்கி கொண்டிருக்கிறது. அதை போக்குவதற்காக குடிநீர் பிரச்சினையை தீர்ப்பதற்காக கோதாவரி- காவேரி நதி நீர் இணைப்பு திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று கேட்டுள்ளோம்.

நான் முதலமைச்சராக இருந்தபோதும் சரி, அம்மா அவர்கள் முதலமைச்சராக இருந்தபோதும் சரி தமிழகத்தில் பல்வேறு சாலைகளை சீரமைக்க வேண்டும், சாலைகளை விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசிடம் கோரிக்கை வைத்தோம். மத்திய
அரசு, இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பல்வேறு சாலைகளை விரிவுபடுத்த அனுமதி அளித்தது. அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

அதுபோல தமிழகத்தில் உள்ள மீனவர்கள் இலங்கை கடற்படையால் அடிக்கடி தாக்கப்படுவதோடு அவர்களின் வலைகளை எடுத்து செல்வதும், படகுகளை சேதப்படுத்துவதும், அவர்களை கைது செய்வதும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. அதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்று பிரதமரை கேட்டுக்கொண்டுள்ளோம்.

கேள்வி:- தேர்தலுக்கு பிறகு பலபேர் கட்சியை விட்டு சென்றுள்ளனர். அதற்கு தலைமை மீது உள்ள அதிருப்திதான் காரணமா?

பதில்:- முன்னாள் அமைச்சர் சென்றுள்ளார். தேர்தலில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தால் அவர்கள் விலகி செல்கின்றனர்.

கேள்வி:- பொதுவாக தொண்டர்கள் அதிருப்தியில் உள்ளதாக கூறப்படுகிறதே?

பதில்:- எந்த தொண்டனும் அதிருப்தியில் இல்லை. அப்படி இருந்தால் கூட்டணியில் எப்படி 75 இடங்களில் வெற்றி பெற்றிருப்போம். கட்டுக்கோப்பாக இருக்கும் இயக்கம் கழகம்.

கேள்வி:- பிரதமரை சந்தித்தபோது தமிழக அரசின் தற்போதைய நிலவரம் குறித்து
ஏதாவது பேசீனீர்களா?

பதில்:- அவர்கள் (தி.மு.க.) ஆட்சி பொறுப்பேற்று மூன்று மாதம்தான் ஆகிறது. அதற்குள் எப்படி சொல்ல முடியும். தமிழக மக்களுக்கு தேவையான திட்டங்களை பெற வேண்டும். கழகத்தை பொறுத்தவரையில் ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்ய வேண்டும் அந்த அடிப்படையில் மத்திய அரசின் மூலமாக தமிழகத்திற்கு என்னென்ன நன்மை கிடைக்க வேண்டுமோ அந்த நன்மை கிடைக்க வலியுறுத்தியுள்ளோம்.

கேள்வி:- லாட்டரி சீட்டை கொண்டு வர மாட்டோம் என்று தி.மு.க. தெரிவித்துள்ளதே?

பதில்:- ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. அரசு லாட்டரி சீட்டை கொண்டு வரும் என்று எங்களுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் அறிக்கை விடுத்தேன். அவர்கள் இல்லை என்று சொல்லியுள்ளார்கள். கற்பனையோடு எதிர்க்கட்சி தலைவர் அறிக்கை விட்டுள்ளார் என்று சொல்லியிருக்கிறார்கள். கற்பனையில் அறிக்கை விடவில்லை. எங்களுக்கு
கிடைத்த தகவலின் அடிப்படையில் அறிக்கை வெளிட்டோம். கொண்டுவரவில்லை என்றால் நல்லது தான்.

கேள்வி:- உங்கள் பயணத்தில் உள்துறை அமைச்சரை சந்திக்கும் திட்டம் உண்டா?

பதில்:- இதுவரை இல்லை. அப்படி வாய்ப்பு கிடைத்தால் மத்திய உள்துறை
அமைச்சரை சந்திப்போம்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும், கழக இணை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி கூறினார்.