நாங்கள் கொண்டு திட்டங்களை நிறைவேற்றவில்லை-கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

சென்னை
திட்டங்கள் அனைத்தையும் கொண்டு வந்தது நாங்கள். ஆனால் அதை நிறைவேற்றி ரிப்பனை கட் செய்வதை கூட ஸ்டாலின் உருப்படியாக செய்யவில்லை என்று கழக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றம்சாட்டி உள்ளார்.
கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி திருப்பூர் மாவட்டம் அவினாசியில் நேற்று நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சியில் உரையாற்றியதாவது:-
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது ஸ்டாலின் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டார். 525 அறிவிப்புகளை வெளியிட்டார். முக்கியமான ஒரு சில அறிவிப்புகளை இதுவரை நிறைவேற்றவில்லை. குடும்பத்தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் ஆயிரம் தருவோம் என்று அறிவித்தார்கள்.
இதுவரை அளிக்கவில்லை. நிதி சரியானதும் பார்ப்போம் என்கிறார்கள். என்றைக்கு நிதி சரியாவது, என்றைக்கு மக்களுக்கு அளிக்க போகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமாக தந்திரமாக தேர்தல் அறிக்கையை வெளியிட்டு மக்களின் வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்த பிறகு அளித்த வாக்குறுதிகளை காற்றிலே பறக்கவிட்டு விட்டார்கள்.
கேஸ் சிலிண்டருக்கு மாதம்தோறும் மானியத்தை வழங்கினார்களா. இதுவரை தரவில்லை. கல்விக்கடன் ரத்து என்ன ஆனது. முதியோர்களின் உதவித்தொகை உயர்த்தப்படும் என்றார்கள். அதுவும் இதுவரை நிறைவேற்றவில்லை. இவர்கள் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. கொடுத்து வந்ததை கூட நிறுத்தியுள்ளார்கள். ஏழை, எளிய மக்களின் குடும்பத்தை சேர்ந்த முதியோர்களுக்கு அம்மாவின் அரசு மாதந்தோறும் ஆயிரம் வழங்கி வந்தது. அந்த முதியோர்களுக்கு வழங்கி வந்த உதவித்தொகையை நிறுத்திய அரசு இந்த விடியா அரசு.
பெட்ரோல், டீசல் விலை குறைக்கப்படும் என்றார்கள். ஏதோ சம்பிரதாயத்திற்காக 3 ரூபாய் குறைத்து விட்டு, இதுவரை விலையை குறைக்கவில்லை. இதனால் அனைத்து பொருட்களின் விலையும் ஏறி வருகிறது. இந்த விலை உயர்வுக்கு காரணம் பெட்ரோல், டீசல் தான்.
எப்போது பார்த்தாலும் மத்திய அரசை குறை சொல்லி வருவது தான் இவர்களின் பணி. மத்திய அரசு விலையை குறைத்தது. மாநில அரசு விலையை குறைக்க வேண்டுமா இல்லையா, இன்றைக்கு இந்தியாவில் இருக்கின்ற மாநிலங்கள் மத்திய அரசு விலையை குறைத்தவுடன், அந்தந்த மாநில முதல்வர்கள் விலையை குறைத்தார்கள். ஆனால் தமிழகத்தில் உள்ள முதல்வர் இன்னும் டீசல் விலையை குறைக்கவில்லை. தேர்தல் காலத்தில் அறிவித்த அறிவிப்புகளை இதுவரை நிறைவேற்றவில்லை. இதைத்தான் நாங்கள் கேட்கிறோம்
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறிப்பிட்டது போல அம்மாவின் அரசால் போடப்பட்ட திட்டங்களை தான் இன்றைக்கு இவர்கள் துவக்கி வைத்து வருகிறார்கள். எந்த புதிய திட்டத்தையும் கொண்டு வரவில்லை. இந்த திருப்பூர் மாவட்டத்திற்கு எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள்.
கோவைக்கு எந்த திட்டத்தை கொண்டு வந்துள்ளார்கள் நாங்கள் தான் பாலத்தை கட்டினோம். அவினாசி-அத்திக்கடவு திட்டத்தை நாங்கள் தான் கொண்டு வந்தோம். அதற்கு தேவையான நிதியை அளித்து விட்டோம். முடியும் தருவாயில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. துரதிர்ஷ்ட வசமாக நீங்கள் திறக்கும் நிலை வந்து விட்டது.
சரி வேகமாக அந்த திட்டத்தை நிறைவேற்றி ரிப்பனை கட் செய்யுங்கள். ரிப்பனை கட் செய்வது தானே உங்கள் வேலை. வேறு எந்த புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளீர்கள். ரிப்பனை கட் செய்வதையும் உருப்படியாக செய்ய மாட்டீர்கள் என்கிறீர்கள். இது தான் வேதனையாக உள்ளது.
இவ்வாறு கழக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எடப்பாடி கே.பழனிசாமி பேசினார்.