சிறப்பு செய்திகள் மற்றவை

போலி வேலைவாய்ப்பு மோசடி கும்பல்மீது நடவடிக்கை தேவை- முதலமைச்சருக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தல்

சென்னை

கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு கொரோனா பாதிப்பு, விவசாயிகளின் விளைபொருள்களுக்கு உரிய விலை கிடைக்காதது, ஒமைக்ரான் குறித்த அச்சம் என பல இன்னல்களுக்கு பொதுமக்கள் ஆளாகி இருக்கின்ற சூழ்நிலையில் போலி வேலைவாய்ப்பு இப்போது புதிதாக உருவெடுத்துள்ளது.

அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவில் வேலைவாய்ப்பு என்று கூறி கிராமப்புற இளைஞர்களை குறிவைத்து மோசடி பேர்வழிகள் ஈடுபட்டுள்ளதை அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வெளிச்சம் போட்டுக்காட்டி உள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது பெருத்த அதிர்ச்சியை அளிக்கிறது. மாநில ஒருங்கிணைப்பாளர்,

தலைமை ஆய்வு அலுவலர், வட்டார ஒருங்கிணைப்பாளர் என இல்லாத பணிகளுக்கு ஆள் எடுக்கும் பணியை மோசடிக்கும்பல் மேற்கொண்டு வருவதாகவும், இதற்கென தனித்தேர்வு நடத்தி அந்தத் தேர்வில் ஐம்பது சதவிகிதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்தவர்கள் மட்டுமே வேலையில் அமர்த்தப்படுவதாகவும், மூன்று நட்சத்திர ஓட்டலில் இதற்கான நேர்காணல் நடத்தப்படுவதாகவும்,

நேர்முகத்தேர்விற்கு வருபவர்களுக்கு என தனி ஆடைக்குறியீடு வகுக்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விண்ணப்பதாரர்கள் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் தெற்கு மண்டல அலுவலகத்தை கேட்பதாகவும் கூறப்படுகிறது.

விண்ணப்பதாரர்களிடமிருந்து வரும் தகவல்களை வைத்து பார்த்தால் மோசடி பணியமர்த்தம் கமுக்கமாக நடைபெற்று வருவதும், அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழுவின் இலச்சினை பயன்படுத்தப்படுவதும், விண்ணப்பதாரர்களின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்படுவதும்,

இதுவரை 18 பேர் பணியமர்த்தப்பட்டு இருப்பதும் தெரிய வந்துள்ளதாக அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அதிகாரி ஒருவர் புகார் கொடுத்துள்ளதாக பத்திரிகையில் செய்தி வந்துள்ளது. இந்த மோசடியில் ஈடுபட்டு இருப்பவர்கள் திருவண்ணாமலை, வேலூர், காஞ்சிபுரம், சேலம், மதுரை மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களை சேர்ந்த இளைஞர்களை குறி வைத்துள்ளதாகவும் தெரிய வருகிறது.

இதுகுறித்து அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அதிகாரி தெரிவிக்கையில், அகில இந்திய தொழில் நுட்ப கல்விக்குழுவின் தெற்கு மண்டல அலுவலகத்தில் 13 பதவிகள் மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நியமனம் குறித்து அகில இந்தியத் தொழில்நுட்ப கல்விக்குழு எந்த விதமான விளம்பரங்களையும் வெளியிடவில்லை என்றும், ஆனால், மோசடி பேர்வழிகள் ஒரு மாவட்டத்திற்கு 18 பேரை நியமனம் செய்துள்ளதாகவும்,

ஞாயிற்றுக்கிழமையை ஒட்டி மற்றுமொரு நேர்காணல் நடக்க இருப்பதாகவும், தேர்வு செய்யப்பட்டவர்களின் வங்கி விவரங்கள் சேகரிக்கப்பட்டு விட்டதாகவும், தேர்வு செய்யப்பட்டவர் களிடமிருந்து பணத்தை மோசடி பேர்வழிகள் வாங்கியிருக்கலாம் என்ற அச்சம் நிறைய இருக்கிறது என்றும், இந்த மோசடி தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று காவல்துறையினரிடம் புகார் வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுபோன்ற மோசடி முளையிலேயே கிள்ளி எறியப்பட வேண்டும்.

இதுகுறித்து போர்க்கால அடிப்படையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், மோசடி பேர்வழிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்பதும்,தேர்வு செய்யப்பட்டவர்களின் பணம் அவர்களிடமே திருப்பி அளிக்க வழிவகை செய்யப்பட வேண்டும் என்பதும், இதுபோன்ற மோசடி பணியமர்த்தம் தமிழ்நாட்டில் வேறு எங்காவது நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும் என்பதும் அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கிறது.

எனவே தமிழ்நாடு முதலமைச்சர் இதில் தக்க கவனம் செலுத்தி, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு அளித்துள்ள புகாரின் அடிப்படையில் இதனை தீர விசாரித்து, மோசடியில் ஈடுபட்டவர்களை சட்டப்படி தண்டிக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்குரிய பணம் அவர்களுக்கு கிடைக்கவும், இதுபோன்ற புகார்கள் இனி வராத வண்ணம் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு கழக ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் முதலமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவருமான ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.