சிறப்பு செய்திகள்

எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் – மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன் செல்லப்பா திட்டவட்டம்

மதுரை

எத்தனை முயற்சிகளை மேற்கொண்டாலும் ஓபிஎஸ் தோல்வியை தழுவுவார், 11-ந்தேதி நடைபெறும் பொதுக்குழுவில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம் என்று மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி.ராஜன்செல்லப்பா எம்.எல்.ஏ. திட்டவட்டமாக கூறி உள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், திருப்பரங்குன்றம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

திருப்பரங்குன்றம் தொகுதியில் எனது சட்டமன்ற உறுப்பினர் நிதியின் கீழ கல்வித்துறைக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக 30 பள்ளிகளில் ஒரு கோடி அளவில் பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறேன். மக்கள் மனதில் என்ன எண்ணங்கள் உள்ளதோ அதை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம்.

இன்றைக்கு மக்கள் மத்தியிலும், கழக தொண்டர்கள் மத்தியிலும் ஒற்றை தலைமை தான் உறுதியாக உள்ளது. எத்தனை வழக்குகளை ஓபிஎஸ் தரப்பு தொடர்ந்தாலும் வருகிற 11-ம்தேதி பொதுக்குழு நடைபெறுவது உறுதி.

அந்த பொதுக்குழு கூட்டத்தில் எடப்பாடியாரை ஒற்றை தலைமையாக தேர்ந்தெடுப்போம். எத்தனை முயற்சிகளை ஓபிஎஸ் மேற்கொண்டாலும் அவர் தோல்வியை தழுவுவார் என்பதில் எந்தவித மாற்றமுமில்லை. ஒட்டுமொத்த அ.தி.மு.க தொண்டர்கள், நிர்வாகிகள் எடப்பாடியார் வசமே உள்ளனர்.

இவ்வாறு மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.வி.ராஜன் செல்லப்பா எம்.எல்.ஏ. கூறினார்.