தற்போதைய செய்திகள்

ஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதி-துணை முதலமைச்சர் தகவல்

சென்னை

ஆதிதிராவிடர்- பழங்குடியின மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த அரசு உறுதி பூண்டுள்ளது என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில் நேற்று நிதி அமைச்சரும், துணை முதலமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் 2021-22-ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசியதாவது:-

ஆதி திராவிடர்கள் மற்றும் பழங்குடியினரின் நிலைக்கத்தக்க சமூகப் பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஆதி திராவிடர் சிறப்புக் கூறுகள் திட்டத்திற்காக 13,967.58 கோடி ரூபாயும், பழங்குடியினர் துணைத் திட்டத்திற்காக 1,276.24 கோடி ரூபாயும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு கல்வி வழங்குவதன் மூலம், அதிகாரம் அளிப்பதற்கு இந்த அரசு அதிக முக்கியத்துவத்தை வழங்கி வருகிறது. 2020-21-ம் ஆண்டு வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ஒதுக்கீடு செய்யப்பட்ட மொத்த தொகையான 4,109.53 கோடி ரூபாயில் 84.14 சதவீதம் அதாவது

3,457.56 கோடி ரூபாய் கல்வி மற்றும் கல்வி சார்ந்த திட்டங்களுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. உயர்கல்வி உதவித்தொகை திட்டத்திற்காக, 2021-22-ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 1,932.19 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

1,25,154 மாணவ மாணவிகள் தங்கும் வகையில் 1,681 விடுதிகள் அரசால் நடத்தப்பட்டு வருகின்றன. பள்ளி விடுதி மாணவ மாணவிகளுக்கான மாதாந்திர உணவுக் கட்டணம் 900 ரூபாயிலிருந்து 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதி மாணவ மாணவிகளுக்கான உணவுக் கட்டணம் 1,000 ரூபாயிலிருந்து 1,100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது. 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயிலும் ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு 1,48,812 மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளன.

2020-21-ம் ஆண்டில், 25,725 பயனாளிகளுக்கு மொத்தம் 150 கோடி ரூபாய் நிதியுதவியில் தாட்கோ செயல்திட்டத்திற்கு அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. ஆதி திராவிடர் குடியிருப்புப் பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்காக, 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பழங்குடியினர் வசிக்கும் தொலைதூரப் பகுதிகளில் பள்ளிகள் துவங்க முன்வரும் அரசு சாராதொண்டு நிறுவனங்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை தொடர்ந்து செயல்படுத்தும் வகையில், 2021-22 ஆம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 4.07 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த 7.40 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி உதவித்தொகைகளை பெற்று வருகின்றனர். கல்வி உதவித்தொகைக்காக இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 374.88 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

2020- 21-ம் ஆண்டில் 3,77,286 மிதிவண்டிகள் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் சமூகத்தைச் சார்ந்த மாணவ மாணவியர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன. 85,914 மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் 1,354 விடுதிகள் தற்போது செயல்பட்டு வருகின்றன.

மாணவ மாணவிகளுக்கான உணவுக் கட்டணம், பள்ளி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு 1,000 ரூபாயாகவும், கல்லூரி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு 1,100 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டது.

சீர்மரபினர் நல வாரியம் மற்றும் நரிக்குறவர் நல வாரியம் ஆகியவை அந்தந்த சமூகத்தை சார்ந்த மக்களின் நலனுக்காக செயல்பட்டு வருகின்றன.

மேலும், வன்னியகுல சத்திரியர் சமுதாயத்தை சார்ந்த தனியர்களால் அல்லது நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட பொறுப்பாட்சிகளின் சொத்துகளையும், நிலைக்கொடைகளின் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு, தமிழ்நாடு வன்னியகுல சத்திரியர் பொது அறநிலைப் பொறுப்பாட்சிகள் மற்றும் நிலைக்கொடைகள் (பாதுகாத்தல் மற்றும் பேணி வருதல்) சட்டம் 2018 இயற்றப்பட்டு, இச்சட்டத்தின் கீழ் ஒரு வாரியம் அமைக்கப்பட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது.

2021-22-ம் ஆண்டில் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தால் 19,855 பயனாளிகளுக்கு கடனுதவி வழங்கப்படும்.

இவ்வாறு துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.