தற்போதைய செய்திகள்

பச்சையப்பன் கல்வி நிறுவனருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு பரிசீலனை – சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தகவல்

சென்னை:-

பச்சைப்பன் கல்வி நிறுவனருக்கு மணிமண்டபம் அமைக்க அரசு பரிசீலனை செய்யும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ தெரிவித்தார்.

சட்டப்பேரவையில்  செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ, சட்டமன்றப் பேரவையில், சட்டமன்றப் பேரவை உறுப்பினர் கருணாசுக்கு அளித்த பதில் வருமாறு:-

சட்டமன்ற உறுப்பினர், பச்சையப்ப முதலியாருக்கு அரசு சிறப்பு செய்ய வேண்டுமென்ற கருத்தை இங்கே சொன்னார். அம்மா அவர்கள் வழியிலே, நாட்டுக்கு உழைத்த நல்லவர்களை, விடுதலைப் போராட்ட வீரர்களை, நாட்டுக்கு தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகச் செம்மல்களை, மொழிப்போர் தியாகிகளை சிறப்பிக்கும் வண்ணம் அவர்களுக்கு மணிமண்டபங்கள், அரசு விழாக்கள் அறிவித்து அரசு பெருமை சேர்த்த வருகிறது.

1754-ம் ஆண்டு பெரியபாளையம் என்ற ஊரில் பிறந்து 1794-ம் ஆண்டு வரை வாழ்ந்தவர் பச்சையப்ப முதலியார். தமிழகத்தின் கல்வி வளர்ச்சிக்கு வழிகோலிய கொடை வள்ளல் என்ற சிறப்பைப் பெற்றவர். இவர் தந்தையார் காஞ்சி விசுவநாத முதலியார், தாயார் பூச்சியம்மாள் ஆவார். ஆங்கிலம் எழுதப் படிக்கவும், கணக்கு மற்றும் வணிகமுறையும் முறையாகக் கற்றார். இவர் மொத்த வணிகர்களுக்கு சரக்கு வாங்கியும், விற்றுக் கொடுக்கும் முகவராக பணியாற்றி தம் 16 வயதிலேயே கொடை வள்ளலானார், அறப்பணிகளுக்குக் கொடை வழங்கினார்.

வரிவசூல் செயலில் இவர் ஆங்கிலேயர்களின் நன்மதிப்பைப் பெற்றார். குறுகிய காலத்திலேயே, சென்னை மாகாணத்தின் சிறந்த மொழி பெயர்ப்பாளராகத் திகழ்ந்தார்.தனது 28-வது வயதில் ஆங்கிலேய நிறுவனத்தில் முக்கியப் பதவி வகித்த ராபர்ட் யோசப்பு சலிவன் என்பவரின் முதன்மை மொழி பெயர்ப்பாளராக ஆங்கில அரசுப்பணி ஏற்றார். இவர் தம் காலத்தில் அறப்பணிகளுக்கு ஆயிரக்கணக்கில் செலவிட்டார். பச்சையப்பன் அறநிலைக் காப்பாளர்கள், அறப்பணிகளையும், கல்விப் பணிகளையும் நடத்தி வருகின்றனர்.

பச்சையப்ப முதலியார் மிகுந்த கடவுள் பற்றுடையவர். இவர் செய்த அறப்பணிகள் பல. காஞ்சிபுரத்து ஏகாம்பரேசுவரர் கோவிலில் திருமண மண்டபம் கட்டினார். பல இடங்களில் அன்னசத்திரங்கள் கட்டினார், சில இடங்களில் அக்ரஹாரம் கட்டினார். இவ்வாறாக இவர் பலப்பல அறப்பணிகளையும், கணக்கில் அடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார். பச்சையப்ப முதலியார் தனது சொத்துகள் அனைத்தையும் கல்விக்காகவும் இறைப் பணிக்காகவும் ஏழைகளுக்காகவும் செலவிட்ட வள்ளல் ஆவார். தென் இந்தியாவில் ஆங்கிலேயரின் உதவியின்றி துவங்கப்பட்ட முதல் கல்வி நிறுவனம் பச்சையப்ப முதலியாரின் சொத்தில் இருந்தே தொடங்கப்பட்டது.

மேலும், கன்னியாகுமரியில் இருந்து காசி வரை பல்வேறு சத்திரங்கள் செயல்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு கோயில்களுக்கு திருப்பணிகளை மேற்கொண்டார். இன்று பச்சையப்பரின் பெயரில் ஆறு கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரியும் 16 பள்ளிகளும் இருக்கின்றன. மேலும், 28 கோயில்களில் அவருடைய பெயரில் அறப்பணிகள் நடக்கின்றன. அறப்பணிகளையும், கணக்கிலடங்கா கொடைகளையும் தன் வாழ்நாளில் செய்தார்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா படித்ததும் இதே கல்லூரியில். 1934ல் இளங்கலைமானி மேதகைமை (ஆனர்ஸ்) மற்றும் அதனை தொடர்ந்து முதுகலை பொருளியல் மற்றும் அரசியல் பட்டப்படிப்புகளை சென்னை பச்சையப்பன் கல்லூரியில் பயின்றார். அதுமட்டுமல்லாமல், எதிர்க்கட்சியின் துணைத் தலைவரும் இதே கல்லூரியில் பயின்றவர். பச்சையப்பன் உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில ஆசிரியராகப் பணியாற்றியவர் பேரறிஞர் அண்ணா.

கல்விப் பணிகளையும், கோயில் திருப்பணிகளையும் தமிழகத்தில் பெரும் அறப்பணியாக செய்து வழிநடத்திய மாபெரும் கல்வி வள்ளல் பச்சையப்ப முதலியாருக்கு அவரது நினைவைப் போற்றும் வகையில் தமிழக அரசு சார்பில் மணிமண்டபமும் அவருக்கு அரசு விழா எடுத்து அறிவிப்பது குறித்து உறுப்பினரின் கருத்து முதலமைச்சரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

இவ்வாறு அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ பதிலளித்தார்.