திருவண்ணாமலை

ஆரணி அருகே கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து அராஜகம்-தி.மு.க. பிரமுகர் மீது ஆட்சியரிடம் புகார்

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ்.வி.நகரம் கிராமத்தில் கால்வாய் புறம்போக்கு இடத்தை ஆக்கிரமித்து கடை கட்டிய திமுக பிரமுகர் அராஜகத்தில் ஈடுபட்டு வருவதாக ஆட்சியரிடம் புகார் கூறி உள்ளார். அதன்பேரில் அதிகாரி வந்து பார்வையிட்டு அகற்ற உத்தரவிட்டும் இதுவரை நடவடிக்கை இல்லை.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அடுத்த எஸ் வி.நகரம் கிராமத்தின் வழியாக ஆரணி கமண்டல நாக நதியிலிருந்து கனிகிலுப்பை கிராம ஏரிக்கு நீர்வரத்து கால் உள்ளது. அந்த இடத்தின் பின்புறம் ஆரணியை சேர்ந்த ஏழுமலை என்பவர் சில வருடத்திற்கு முன்பு காலி இடம் வாங்கியுள்ளார். ஏழுமலை இடத்திற்கு முன்பு உள்ள கால்வாய் பகுதியில் தி.மு.க பிரமுகர் கன்னியப்பன் மற்றும் குணசேகரன் என்பவரும், கடை வைத்திருந்தனர்.

அந்த கடைகளை காலி செய்ய ஏழுமலை வழக்கு தொடர்ந்ததின் பேரில் 2016ம் வருடம் கழக ஆட்சியின் போது ஆக்கிரமிப்பு கடைகள் காலி செய்யப்பட்டது. அங்கிருந்த குணசேகரன் என்பவர் வறுமையில் இருந்தவர் என்பதால் தமிழக அரசின் இலவச வீடு தரப்பட்டது. திமுக பிரமுகர் கன்னியப்பனுக்கு நிலம் வீடு இருப்பதால் அரசின் உதவிகள் தரப்படவில்லை. பின்னர் இடத்திற்கு சொந்தக்காரர் ஏழுமலை 2019ம் ஆண்டு கடைகள் கட்டி வாடகைக்கு விட்டார். பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் தி.மு.க பிரமுகர் கன்னியப்பன் தனது பணியினை துவங்கினார். ஏற்கனவே ஆக்கிரமித்திருந்த இடத்தில் 2022ம் ஆண்டு ஜனவரி மாதம் கொட்டகை அமைத்து அதில் திமுக காலண்டரை மாட்டினார்.

இதுகுறித்து ஏழுமலை கேட்டதற்கு மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. மேலும் ஏழுமலையின் கடையில் வாடகை இருந்தவர்கள் காலி செய் துவிட்டனர். இதனால் கொதிப்படைந்த ஏழுமலை, ஆக்கிரமிப்பு குறித்து ஆரணி வட்டாட்சியர், கிராம நிர்வாக அதிகாரி, ஊராட்சி மன்ற தலைவர், பொதுப்பணித்துறை அதிகாரிகள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்ந்து புகார் செய்து வந்தார். நடவடிக்கை இல்லாத நிலையில் கடந்த ஜூன் 27-ந்தேதி திங்கட்கிழமை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஏழுமலை புகார் செய்தார்.

அதன் பேரில் ஜூன் 29ம்தேதி புதன்கிழமை ஆரணி கோட்டாட்சியர் கவிதா சென்று பார்வையிட்டு உடனடியாக ஆக்கிரமிப்பினை அகற்றுமாறு உத்தரவிட்டார். என்றாலும் இதுவரை ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளது. ஆக்கிரமிப்பு செய்த கன்னியப்பன் தி.மு.க.வை சேர்ந்தவர். மேலும் அவரது மனைவி தி.மு.க.வில் ஒன்றிய பொறுப்பில் உள்ளார் என்பதால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படவில்லை.