கன்னியாகுமரி

வடசேரியில் ரூ.1.51 கோடியில் புதிய வணிக வளாகம் பணி – என்.தளவாய்சுந்தரம் தொடங்கி வைத்தார்

கன்னியாகுமரி

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமியின் அறிவிப்பிற்கிணங்க, இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வடசேரியில் ரூ.1.51 கோடி செலவில் புதியதாக கட்டப்படவுள்ள, 13 கடைகளுடன் கூடிய வணிகவளாகம், அர்ச்சகர் குடியிருப்பு ஆகியவற்றிற்கு, தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய் சுந்தரம்அடிக்கல் நாட்டினார்.

முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி, 2019-2020-ம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின் போது, கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவில்-வடசேரி பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் அருகில், ரூ.71.50 லட்சம் மதிப்பில் 13 கடைகளுடன் கூடிய வணிக வளாகமும், கிருஷ்ணன்கோவில், கிருஷ்ணசுவாமி கோயில் அருகில் ரூ.61 லட்சம் மதிப்பில், அர்ச்சகர் குடியிருப்பு கட்டுவதற்கும், நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகில் ரூ.18.60 லட்சம் மதிப்பில் குளியலறை மற்றும் கழிப்பறை ஆகியவை கட்டப்படும் என சட்டப்பேரவையில் அறிவித்தார்.

அதனடிப்படையில், கன்னியாகுமரி மாவட்டம், இந்து சமய அறநிலையத்துறை திருக்கோயில்கள், சுசீந்திரம் சார்பில், வடசேரி அருள்மிகு பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் அருகில், ரூ.40 லட்சம் திருக்கோயில் நிதியுடன், ரூ.31.50 லட்சம் ஆணையர் பொதுநல நிதியுடன் சேர்த்து ஆக மொத்தம் ரூ.71.50 லட்சம் மதிப்பில் 13 கடைகளுடன் கூடிய வணிக வளாகம் கட்டுவதற்கும், கிருஷ்ணன்கோவில்,கிருஷ்ணசுவாமி கோயில் அருகில் ரூ.61 லட்சம் மதிப்பில் 4 அர்ச்சகர் குடியிருப்புகள் கட்டுவதற்கும், நாகர்கோவில் நாகராஜா கோயில் அருகில் ரூ.10.60 லட்சம் கோயில் நிதியுடன், ரூ.8 லட்சம் ஆணையர் பொதுநலநிதியுடன், ஆக மொத்தம் ரூ.18.60 லட்சம் மதிப்பில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தலா 2 குளியலறைகளும் மற்றும் 4 கழிப்பறைகளும் கட்டுவதற்கான திட்ட மதிப்பீடு செய்யப்பட்டு, அதற்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

அதனடிப்படையில், தமிழ்நாடு அரசின் டெல்லி சிறப்பு பிரதிநிதி என்.தளவாய்சுந்தரம், வடசேரி பூதம் வணங்கும் கண்டன் சாஸ்தா கோயில் அருகில், நடைபெற்ற நிகழ்ச்சியில் ரூ.1.51 கோடி மதிப்பில் புதியதாக 13 கடைகளுடன் கூடிய வணிக வளாகம், அர்ச்சகர் குடியிருப்பு மற்றும் குளியல் மற்றும் கழிப்பறைகள் கட்டும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிநிகழ்ச்சியில், மாவட்ட ஆவின் பெருந்தலைவர் எஸ்.ஏ.அசோகன், மாவட்ட அறங்காவலர் குழுத்தலைவர் சிவ.குற்றாலம், இணை ஆணையர் (இந்து சமய அறநிலையத்துறை) எம்.அன்புமணி, மாவட்ட கூட்டுறவு ஒன்றியப் பெருந்தலைவர் எஸ்.கிருஷ்ணகுமார், உதவி இயக்குநர் ராஜகுமார், அறங்காவலர் குழு உறுப்பினர்கள் எம்.ஜெயசந்திரன் (எ) சந்துரு, எஸ்.அழகேசன் (அகஸ்தீஸ்வரம் ஊராட்சி ஒன்றியத்தலைவர்), கே.பாக்கியலெட்சுமி, எஸ்.சதாசிவம், இராஜாக்கமங்கலம் ஊராட்சி ஒன்றியத்தலைவர் ஆர்.அய்யப்பன், மாவட்ட கூட்டுறவு அச்சகத்தலைவர் ஆர்.ஜெயசுதர்சன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.