சிறப்பு செய்திகள்

கழக பொதுச்செயலாளர் பதவியில் எடப்பாடியார் அமர வைக்கப்படுவார்

முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் திட்டவட்டம்

அம்பத்தூர்

வரும் ஜூலை 11-ம்தேதி வேலப்பன்சாவடி வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் மண்டபத்தில் கழகத்தின் செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டம் நடைபெறுகிறது.

அதற்காக பிரம்மாண்ட செட் அமைக்கும் பணிகள் முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட கழக செயலாளருமான பா.பென்ஜமின் மேற்பார்வையில் நடைபெற்று வருகிறது.

இந்தப்பணிகளை நேற்று தலைமை கழக நிர்வாகிகளும், முன்னாள் அமைச்சர்களும், மாவட்ட கழக செயலாளர்களுமான நத்தம் இரா.விசுவநாதன், திண்டுக்கல் சி.சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, ஆர்.பி.உதயகுமார், டாக்டர் சி.விஜயபாஸ்கர், செல்லூர் கே.ராஜூ ஆகியோர் நேரில் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது பொதுக்குழு நடைபெறும் மேடை, பொதுக்குழு உறுப்பினர்கள் அமரும் இடம், உணவு பரிமாறும் இடம் ஆகியவற்றை பார்வையிட்டு பணிகளை துரிதப்படுத்தினர்.

இதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

பொதுக்குழு தொடர்பான முன்னேற்பாடுகளை பார்வையிட தலைமை கழக நிர்வாகிகள் வந்தோம். வரும் 11-ம்தேதி திட்டமிட்டபடி மிக சிறப்பாக, எழுச்சியோடு பொதுக்குழு கூட்டம் நடைபெறும். சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடை பெறும் இந்த பொதுக்குழுவிலே, சென்ற முறை பொதுக்குழுவில் நிராகரித்த தீர்மானங்களில் ஒரு சில தீர்மானங்களை தவிர்த்து மற்ற தீர்மானங்களை எல்லாம் வைத்து நிறைவேற்றப்படும்.

அதில் ஒற்றை தலைமை, குறிப்பாக பொதுச்செயலாளர் பதவியை உருவாக்கி, கழகத்தின் அனைத்து அதிகாரங்களையும் படைத்த பொதுச்செயலாளர் பதவி, புரட்சித்தலைவர் காலத்திலும், புரட்சித்தலைவி அம்மா காலத்திலும் பொதுச்செயலாளருக்கு என்ன அதிகாரம் இருந்ததோ அந்த அதிகாரங்கள் அத்தனையும் உள்ளடக்கிய பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த பொதுச்செயலாளர் பதவியிலே முன்னாள் முதலமைச்சரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடியாரை தேர்வு செய்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்படும் என்பதை உறுதியோடு தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த பொதுக்குழு செல்லாது என்று வைத்திலிங்கம் தெரிவித்துள்ளார். அவரை சுற்றியுள்ளவர்களுக்கு நம்பிக்கை ஏற்படுத்த வேண்டும் என்று தவறான தகவலை தெரிவித்து வருகிறார். இந்த பொதுக்குழு சட்டப்படி நடைபெறும்.
சட்ட விதிகளின்படி நடைபெறும் இந்த பொதுக்குழுவை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.

இங்கு நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் அத்தனையும் செயல்பாட்டிற்கும் வரும். ஓ.பன்னீர்செல்வம் இன்றும் நான் தான் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக செயல்படுகிறேன் என்று தெரிவிக்கிறார். ஆனால் அவரிடம் இருக்கின்ற வைத்திலிங்கம் அதற்கு மாறாக இப்போது இரட்டை தலைமை சர்ச்சைக்கு உள்ளாகியுள்ளதால் பொதுக்குழு தீர்மானம் செல்லாது என்று சொல்கிறார்.

இப்போது இரட்டை தலைமை சர்ச்சைக்குள்ளாகியுள்ளது என்று வைத்தியலிங்கமே சொல்கிறார். இரட்டை தலைமையில் நான் தான் ஒருங்கிணைப்பாளர் என்று ஓபிஎஸ் சொல்கிறார். அவர்கள் இருவருக்குமே ஒற்றை கருத்து இல்லை.

ஆகவே ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை என்பதை வைத்தியலிங்கமும் ஒத்துக்கொள்கிறார். இந்த சூழ்நிலையில் இப்போது ஒருங்கிணைப்பாளர் பதவியும், இணை ஒருங்கிணைப்பாளர் பதவியும் இல்லை. இப்போது தலைமைக்காக நிர்வாகிகள் தான் இருக்கின்றார்கள்.

ஏற்கனவே பொறுப்பில் இருந்தவர்கள், நியமனம் செய்த தலைமை கழக நிர்வாகிகள் இப்போது செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். கழகத்தின் சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர் மறைந்து விட்டாலோ, பொதுச்செயலாளர் பதவி நீக்கம் செய்யப்பட்டாலோ, அந்த இடம் வெற்றிடமாகி விட்டால், அந்த பதவி இல்லாமல் போய்விட்டால், ஏற்கனவே நியமிக்கப்பட்ட தலைமைக்காக நிர்வாகிகள் தொடர்ந்து செயல்படுவார்கள் என்று கழக விதி தெளிவாக உள்ளது.

இப்போது ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் இல்லாமல் போய்விட்ட சூழ்நிலையில், ஏற்கனவே அவரால் நியமிக்கப்பட்ட தலைமை கழக நிர்வாகிகள் இப்போது தொடர்ந்து செயல்படுகிறார்கள். அந்த கட்சி விதிகளுக்கு உட்பட்டு அவர்கள் தான் இந்த பொதுக்குழுவை நடத்துகிறார்கள். எனவே இதல் எந்த சட்ட சிக்கலும் இல்லை, எந்த பிரச்சினையும் இல்லை. இந்த பொதுக்குழு கூட்டம் 11-ம்தேதி திட்டமிட்டபடி எழுச்சியோடு நடைபெறும்.

99 சதவீத கழக நிர்வாகிகளுக்கும், 99 சதவீத பொதுக்குழு மற்றும் செயற்குழு உறுப்பினர்களுக்கும், 99 சதவீத கழக தொண்டர்களுக்கும் ஒற்றை தலைமை வேண்டும் என்பது தான் விருப்பம். அது எடப்பாடியார் தலைமையில் தான் இருக்க வேண்டும் என்று முடிவு எடுத்துள்ளார்கள். அவர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்கின்ற வகையிலே சிறப்பாக இந்த பொதுக்குழு நடைபெறும்.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் கேட்ட கேள்வியும், அதற்கு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் அளித்த பதில்களும் வருமாறு:-

கேள்வி: இந்த பொதுக்குழுவிற்கு அடிப்படுகின்ற அழைப்பிதழிலில் தலைமை கழகம் என்று உள்ளதே, இதுபோன்று தான் வழக்கமாக நடைபெறுமா?

பதில்: ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை, இணை ஒருங்கிணைப்பாளர் பதவி இல்லை. தலைமை பதவி இல்லாத போது அவர்களால் நியமிக்கப்பட்ட தலைமைக்காக நிர்வாகிகள் எத்தனை பெயரை போடுவது. அதனால் தலைமை கழகம் என்று போடுகிறார்கள்.

கேள்வி: தலைமை கழகம் என்ற பெயரை அ.தி.மு.க பயன்படுத்தக்கூடாது என்று வைத்தியலிங்கம் குறிப்பிடுகிறாரே.

பதில்: அவர் யார் இதனை குறிப்பிடுவதற்கு. அவருக்கு என்ன அதிகாரம் இருக்கின்றது. இதனை தெரிவிப்பதற்கு. 99 சதவீத நிர்வாகிகள் இங்கு ஒன்றாக இருக்கின்றோம். 1 சதவீத ஆதரவை வைத்துக்கொண்டு பேசி வருகிறார். இதனை குறிப்பிடுவதற்கு அவருக்கு எந்த தார்மீக உரிமையும் கிடையாது. சட்டப்படியும் உரிமையும் கிடையாது.

இவ்வாறு முன்னாள் அமைச்சர் நத்தம் இரா.விசுவநாதன் தெரிவித்தார். இந்த ஆய்வின்போது, திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும், பொன்னேரி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான சிறுணியம் பி.பலராமன்,